முன் குறிப்பு: இது முழுக்க முழுக்க, நான் வாசித்த, வாசித்துக் கொண்டிருக்கிற பிரபல பதிவர்களுடைய பதிவுகளின் அடிப்படையிலேயும், அவைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலேயும் மட்டுமே எழுதப் பட்டது.. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.
முக்கிய குறிப்பு (அ) மூக்குக் குறிப்பு:இதில் சம்பந்தப் பட்டவர்களோ, உடன்பாடு இல்லாதவர்களோ, அல்லது அப்படின்னா நாங்க எல்லாம் பிரபல பதிவர்கள் இல்லையா என்பவர்களும் இங்கயே கருத்து தெரிவித்துவிடுங்கள்.. நேரில் தனியாகக் கூப்பிட்டு மூக்கில் குத்தவேண்டாம்!!! (மூக்கு முக்கியமில்லீங்களா!!! அதான்!)
**********************************************************
ஓ.கே... வாங்க! ஒவ்வொருத்தரா பார்ப்போம்!!!
அனுஜன்யா:ஆரம்பத்திலேயே குழப்பறேனா??? அவரோட கவிதைகள் படியுங்கள்.. அப்போது தான் புரியும், நானும் மற்ற சிலரும் கவிதை என்ற பெயரில் எழுதி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை.. இவரின் பல கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சங்ககாலப் புலவர்களின் அருகாமை இருந்தால் மட்டுமே சாத்தியம். விளக்கத்தை வார்த்தைகளுக்குள் ரகசியமாய் ஒளித்து வைக்கும் சூட்சுமம் அறிந்தவர். இலக்கியம் விரும்புவோரின் ஒரே சாய்ஸ்.
நர்சிம்:வலைப்பக்கம் மூலம் மற்றவை மட்டுமல்ல மனிதம் வளர்க்கவும் முடியும் என்று அடிக்கடி நிரூபிக்கும் நபர். "கார்பொரேட் கம்பர்" என்று அழைக்கப் படுகிறவர். சங்கத் தமிழின் பல பாடல்களை தக்க விளக்கத்துடன் தருபவர். மலரும் நினைவுகளாய் இவர் எழுதும் பல பதிவுகள் நம் நினைவில் மலர்களாய் இருக்கும் எப்போதும். "ஏதாவது செய்யணும் பாஸ்" என்ற நல்ல என்'ணங்கள் கொண்டவர். ஒரே வருத்தம். பிரச்சனைகளின் போது இவர் எப்போதும் தனி ஆளாய் குரல் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கிறார். "நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்....."
பரிசல்காரன்:"ரசிப்போர் விழி தேடி" என்று ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து ரசிக்கும் குணம் கொண்ட அனைவரும் இவரின் வழி தேடி வர வேண்டும். ஆழ்ந்த எழுத்துக்கள். எவர் மனமும் புண்படும்படி இவர் எழுதி நான் படித்ததில்லை. மென்மையாய் மட்டுமே இவர் எழுதினாலும் பல கருத்துக்கள் வன்மையாய் நம் மனதில் பதியும். அட்டகாசமான அவியல், அவ்வபோது கவிதைகள், கதைகள், நகைச்சுவை என்று தென்றலாய் வீசுபவர். ஒரே குறை: வேலைப்பளு காரணமாய் தென்றல் விட்டு விட்டு வீசும்.
கார்க்கி:சரவெடி. விடாமல் எழுதிக் கொண்டே இருப்பார். எதைப் பற்றியாவது.. வாசகர் வட்டம் எவ்வளவு பெரியது என்பது இவரின் பல பதிவுகளின் மூலம் புலப்படும். பதிவுலகம் அடுத்தகட்டத்தை எட்ட விழைபவர்களில் இவரும் ஒருவர். ஏழு, காக்டெயில் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். தேவதை, புஜ்ஜி என்று புல்லரிக்க வைப்பார். திடீரென விஜய் பற்றிய விவாதங்களும், ஆங்காங்கே சில படு மொக்கைகளுமாய் நம்மை கிறுகிறுக்கவும் வைப்பார். மொத்தத்தில் கமர்ஷியல் கலவை.
கேபிள் சங்கர்:வாசககர்களால் கேபிளார் என்றும், சக பதிவர்களால் "யூத்" என்றும் செல்லமாக அறியப்படுபவர். இப்போதெல்லாம் இவரின் விமர்சனம் படித்துவிட்டு தான், புதிதாய் வெளியாகும் படங்களுக்குப் போவதைப் பற்றி யோசிக்கிறேன். கொத்துபரோட்டா பரிமாறி வருவோரை பசியாற வைப்பவர். குறும்படங்கள், நிதர்சனக் கதைகள் என்று ஒவ்வொன்றும் நின்று விளையாடும் இவர் பதிவில். இவரின் ஹாட்-ஸ்பாட் பற்றியும் ஏ-ஜோக்ஸ் பற்றியும் சொல்லவில்லை என்றால் எனக்கு ரசனை கம்மி என்று அர்த்தம்.
ஜாக்கி சேகர்:அட்டகாசமான சினிமா விமர்சகர். உலகப் படங்களைப் பார்த்து அதில் தான் ரசித்தவற்றை மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். முரட்டுத் தனமான எழுத்து நடை. ஆனால், வெகு சாதாரணத் தமிழிலேயே கருத்துக்கள் எளிதாக மக்களை சென்றடையும்படி பதிவிடுபவர். இவர் தன் மனைவியின்பால் கொண்ட அன்பு அடிக்கடி இவர் எழுத்துக்களில் பளிச்சிடும். இவர் ஒரு திங்க் குளோபல், ஆக்ட் லோக்கல் ஆசாமி. இவரும், கேபிள் சாரும் வெகு விரைவில் கோடம்பாக்கத்தைக் கலக்கப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
தாமிரா (அ) ஆதிமூலகிருஷ்ணன்:எனக்குத் தெரிந்து இவர் பதிவுகளைத் தான் ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தேன் என்று நினைவு. அப்போது இவர் எடுத்த போட்டோக்களை எல்லாம் பதிவிடுவார். (கரெக்ட்டா சார்??).. அமர்க்களமாய் எழுதுவார். வெறும் எழுத்துக்களில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார். தங்கமணிகள் பற்றிய இவரின் ஒவ்வொரு பதிவும் கலக்கலாய் இருக்கும். அவ்வபோது சிக்ஸ் சிக்மா, போக்க யோகே(அப்படின்னாவா? என்னைக் கேட்டா???) என்றெல்லாம் எழுதி என் போன்ற மரமண்டைகளுக்கு பீதியைக் கிளப்புவார்.
அவிய்ங்க ராசா:மதுரை பாணியில் (மதுரை சம்பவம் இல்லீங்க...) பதிவுகள் படிக்க வேண்டுமா?? யோசிக்காமல் இவர் பதிவை படிக்கலாம். பொதுவாக இவர் பதிவினை படிக்க ஆரம்பிக்கையில் ஆர்வத்தில் கண்கள் விரியும். முடியும்போது கண்கள் குளமாவது உறுதி. ஒன்று சென்டிமென்ட்டாக இருக்கும்.. அல்லது நகைச்சுவையாக இருக்கும். புனைவோ, சொந்த அனுபவங்களோ அவருக்கு ஏற்பட்ட அதே உணர்ச்சியை படிப்பவருக்கும் பரப்பி விடுவதில் கில்லாடி. முக்கியமாய் பதிவுலகைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர். அது அவரின் பல பதிவுகளில் புலப்படும்.
*************************
அவ்வளோ தாங்க... இவங்கள எல்லாம் கூர்ந்து கவனித்து தாங்க நானும் எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை... ஆனாலும் நீங்க இன்னொரு முறை
முன்குறிப்பையும், மூக்குக் குறிப்பையும் படிப்பது எனக்கு நல்லது...!!!