Friday, October 30, 2009

நீ முதல்ல தமிழ ஒழுங்கா பேசு!!!

இது கொஞ்ச நாளைக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம். நானும் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் செந்திலும் வெவ்வேறு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அன்று மாலை எங்கள் இருவருக்கும் தெரிந்த மற்றொரு நண்பரின் திருமண வரவேற்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து செல்வதாக திட்டம்.

மாலை நான் எனது அலுவலகத்திலிருந்து கிளம்பும் முன் அவனைத் தொடர்பு கொள்ள முயன்றேன். செல்பேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் அவனின் அலுவலக எண்ணுக்கு அழைத்தேன்.

எதிர்முனையில் ஒரு முரட்டுக்குரல் பேசியது.

"யார் வேணும்??"

"நான் செந்தில் கிட்ட பேசணும்..."

"நீ யார் சொல்லுங்க???" - வடமாநிலத்தை சேர்ந்தவர் போல.. தமிழ் தடுமாறியது அவரிடம்.

"நான் அவன் பிரெண்டு பேசறேங்க..."

"என்ன.. அவன் இவன்னு சொல்ற?"...

(இதுவேறயா என்று நினைத்துக் கொண்டு...) "சார்.. நான் அவன் என் பிரெண்டு... அப்படி தான் கூப்பிட்டுக் கொள்வோம்.. கொஞ்சம் செந்தில் கிட்ட போன் கொடுக்கறீங்களா...???"

"என்னம்மா நீ? நான் சொல்லிக்கிட்டே இருக்கு.. நீ செந்தில் கிட்ட போன் கொடு சொல்றீங்க?..."

இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று எண்ணியபடி...

"சார்.. கொஞ்சம் செந்தில் கிட்ட போன் கொடுக்கறீங்களா...???" என்றேன் மறுபடி...

"முதொல்ல நீங்க மரியாதையா பேசு..." என்றது அந்தக் குரல்...

வந்த கடுப்புக்கு... "நீ முதல்ல தமிழ ஒழுங்கா பேசு" என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

சிறிது நேரத்தில் செந்தில் என்னை அழைத்தான்.

"சொல்டா.. எங்க இருக்க??" இது நான்...

"அதைவிடுடா.. என் மேனேஜர் கிட்ட என்னடா சொன்ன?.. என்னை உள்ள கூப்பிட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு" என்றான் சோகமாக...

மச்சி சாரிடா... அவர் உன் மேனேஜரா???... கடுப்பேத்திட்டாருடா.. என்றபடி விஷயத்தை விளக்கினேன்...

நல்லா கடுப்பான போ.. அந்தாளு நார்த் இந்தியாடா... சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு... என்றான் சலிப்புடன்...

அதுக்கப்புறம் என்ன ஆனாலும் சரி.. அவன் அலுவலக எண்ணுக்கு மட்டும் நான் தொடர்பு கொள்வதேயில்லை..

Thursday, October 22, 2009

பிரபல பதிவர்கள் – எனது பார்வையில்

முன் குறிப்பு:
இது முழுக்க முழுக்க, நான் வாசித்த, வாசித்துக் கொண்டிருக்கிற பிரபல பதிவர்களுடைய பதிவுகளின் அடிப்படையிலேயும், அவைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலேயும் மட்டுமே எழுதப் பட்டது.. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

முக்கிய குறிப்பு (அ) மூக்குக் குறிப்பு:
இதில் சம்பந்தப் பட்டவர்களோ, உடன்பாடு இல்லாதவர்களோ, அல்லது அப்படின்னா நாங்க எல்லாம் பிரபல பதிவர்கள் இல்லையா என்பவர்களும் இங்கயே கருத்து தெரிவித்துவிடுங்கள்.. நேரில் தனியாகக் கூப்பிட்டு மூக்கில் குத்தவேண்டாம்!!! (மூக்கு முக்கியமில்லீங்களா!!! அதான்!)

**********************************************************

ஓ.கே... வாங்க! ஒவ்வொருத்தரா பார்ப்போம்!!!

அனுஜன்யா:
ஆரம்பத்திலேயே குழப்பறேனா??? அவரோட கவிதைகள் படியுங்கள்.. அப்போது தான் புரியும், நானும் மற்ற சிலரும் கவிதை என்ற பெயரில் எழுதி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை.. இவரின் பல கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சங்ககாலப் புலவர்களின் அருகாமை இருந்தால் மட்டுமே சாத்தியம். விளக்கத்தை வார்த்தைகளுக்குள் ரகசியமாய் ஒளித்து வைக்கும் சூட்சுமம் அறிந்தவர். இலக்கியம் விரும்புவோரின் ஒரே சாய்ஸ்.

நர்சிம்:
வலைப்பக்கம் மூலம் மற்றவை மட்டுமல்ல மனிதம் வளர்க்கவும் முடியும் என்று அடிக்கடி நிரூபிக்கும் நபர். "கார்பொரேட் கம்பர்" என்று அழைக்கப் படுகிறவர். சங்கத் தமிழின் பல பாடல்களை தக்க விளக்கத்துடன் தருபவர். மலரும் நினைவுகளாய் இவர் எழுதும் பல பதிவுகள் நம் நினைவில் மலர்களாய் இருக்கும் எப்போதும். "ஏதாவது செய்யணும் பாஸ்" என்ற நல்ல என்'ணங்கள் கொண்டவர். ஒரே வருத்தம். பிரச்சனைகளின் போது இவர் எப்போதும் தனி ஆளாய் குரல் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கிறார். "நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்....."

பரிசல்காரன்:
"ரசிப்போர் விழி தேடி" என்று ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து ரசிக்கும் குணம் கொண்ட அனைவரும் இவரின் வழி தேடி வர வேண்டும். ஆழ்ந்த எழுத்துக்கள். எவர் மனமும் புண்படும்படி இவர் எழுதி நான் படித்ததில்லை. மென்மையாய் மட்டுமே இவர் எழுதினாலும் பல கருத்துக்கள் வன்மையாய் நம் மனதில் பதியும். அட்டகாசமான அவியல், அவ்வபோது கவிதைகள், கதைகள், நகைச்சுவை என்று தென்றலாய் வீசுபவர். ஒரே குறை: வேலைப்பளு காரணமாய் தென்றல் விட்டு விட்டு வீசும்.

கார்க்கி:
சரவெடி. விடாமல் எழுதிக் கொண்டே இருப்பார். எதைப் பற்றியாவது.. வாசகர் வட்டம் எவ்வளவு பெரியது என்பது இவரின் பல பதிவுகளின் மூலம் புலப்படும். பதிவுலகம் அடுத்தகட்டத்தை எட்ட விழைபவர்களில் இவரும் ஒருவர். ஏழு, காக்டெயில் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். தேவதை, புஜ்ஜி என்று புல்லரிக்க வைப்பார். திடீரென விஜய் பற்றிய விவாதங்களும், ஆங்காங்கே சில படு மொக்கைகளுமாய் நம்மை கிறுகிறுக்கவும் வைப்பார். மொத்தத்தில் கமர்ஷியல் கலவை.

கேபிள் சங்கர்:
வாசககர்களால் கேபிளார் என்றும், சக பதிவர்களால் "யூத்" என்றும் செல்லமாக அறியப்படுபவர். இப்போதெல்லாம் இவரின் விமர்சனம் படித்துவிட்டு தான், புதிதாய் வெளியாகும் படங்களுக்குப் போவதைப் பற்றி யோசிக்கிறேன். கொத்துபரோட்டா பரிமாறி வருவோரை பசியாற வைப்பவர். குறும்படங்கள், நிதர்சனக் கதைகள் என்று ஒவ்வொன்றும் நின்று விளையாடும் இவர் பதிவில். இவரின் ஹாட்-ஸ்பாட் பற்றியும் ஏ-ஜோக்ஸ் பற்றியும் சொல்லவில்லை என்றால் எனக்கு ரசனை கம்மி என்று அர்த்தம்.

ஜாக்கி சேகர்:
அட்டகாசமான சினிமா விமர்சகர். உலகப் படங்களைப் பார்த்து அதில் தான் ரசித்தவற்றை மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். முரட்டுத் தனமான எழுத்து நடை. ஆனால், வெகு சாதாரணத் தமிழிலேயே கருத்துக்கள் எளிதாக மக்களை சென்றடையும்படி பதிவிடுபவர். இவர் தன் மனைவியின்பால் கொண்ட அன்பு அடிக்கடி இவர் எழுத்துக்களில் பளிச்சிடும். இவர் ஒரு திங்க் குளோபல், ஆக்ட் லோக்கல் ஆசாமி. இவரும், கேபிள் சாரும் வெகு விரைவில் கோடம்பாக்கத்தைக் கலக்கப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

தாமிரா (அ) ஆதிமூலகிருஷ்ணன்:
எனக்குத் தெரிந்து இவர் பதிவுகளைத் தான் ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தேன் என்று நினைவு. அப்போது இவர் எடுத்த போட்டோக்களை எல்லாம் பதிவிடுவார். (கரெக்ட்டா சார்??).. அமர்க்களமாய் எழுதுவார். வெறும் எழுத்துக்களில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார். தங்கமணிகள் பற்றிய இவரின் ஒவ்வொரு பதிவும் கலக்கலாய் இருக்கும். அவ்வபோது சிக்ஸ் சிக்மா, போக்க யோகே(அப்படின்னாவா? என்னைக் கேட்டா???) என்றெல்லாம் எழுதி என் போன்ற மரமண்டைகளுக்கு பீதியைக் கிளப்புவார்.

அவிய்ங்க ராசா:
மதுரை பாணியில் (மதுரை சம்பவம் இல்லீங்க...) பதிவுகள் படிக்க வேண்டுமா?? யோசிக்காமல் இவர் பதிவை படிக்கலாம். பொதுவாக இவர் பதிவினை படிக்க ஆரம்பிக்கையில் ஆர்வத்தில் கண்கள் விரியும். முடியும்போது கண்கள் குளமாவது உறுதி. ஒன்று சென்டிமென்ட்டாக இருக்கும்.. அல்லது நகைச்சுவையாக இருக்கும். புனைவோ, சொந்த அனுபவங்களோ அவருக்கு ஏற்பட்ட அதே உணர்ச்சியை படிப்பவருக்கும் பரப்பி விடுவதில் கில்லாடி. முக்கியமாய் பதிவுலகைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர். அது அவரின் பல பதிவுகளில் புலப்படும்.


*************************

அவ்வளோ தாங்க... இவங்கள எல்லாம் கூர்ந்து கவனித்து தாங்க நானும் எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை... ஆனாலும் நீங்க இன்னொரு முறை முன்குறிப்பையும், மூக்குக் குறிப்பையும் படிப்பது எனக்கு நல்லது...!!!

Sunday, October 18, 2009

தீபாவளி – சிறுகதை

அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
இது என் முதல் முயற்சி.. முன்பே யோசித்து வைத்திருந்ததை தீபாவளிக்காக சற்று மாற்றியமைத்து இருக்கிறேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்.. நன்றி!!!

*********************
diwali
விடிந்தால் தீபாவளி...

"எனக்கு சுறுசுறு மத்தாப்பு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........." மூன்று வயது சௌம்யாவின் குரல் அந்த பிளாட்டின் இரண்டாவது மாடி முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது...

வேணாம்டா செல்லம்... அப்புறம் உன் கையில "ஊஊஊ" பட்டுடும்.. என்று சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார் அவளின் அப்பா..

சத்தம் பொறுக்காமல் கதவை மூடிவிட்டு வந்தார் சீனிவாசன்.

"அப்பப்பா... குழந்தையா அது?? என்ன கத்து கத்துது??? ரெண்டு நிமிஷம் டிவியில் நியூஸ் பார்க்க முடியுதா...? அடுத்த அசோசியேஷன் மீட்டிங்கில் கம்ப்ளைண்ட் பண்ணனும்" என்றவாறே இருக்கையில் அமர்ந்தார்..

"நான் கூட உங்ககிட்ட சொல்லனும்னு நெனைச்சேங்க... சில சமயம் அந்த குழந்தை போடற சத்தத்துல மதியத்துல தூங்கவே முடியறதில்ல..." - இது சீனிவாசனின் மனைவி கமலம்மாள்...

சீனிவாசன். தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் அடையாளமாக கை, கால், முகம் என அங்கங்கு சிறுசிறு தீக்காயங்களின் வடுக்கள் உண்டு அவருக்கு. கமலம்மாள் கணவன் குணமறிந்து நடக்கும் இல்லாள். இவர்களின் ஒரே மகன் ஸ்ரீதர். கல்யாணமான கொஞ்ச நாளிலேயே மனைவியுடன் தனிக்குடித்தனம் போய்விட்டான். தன் மனைவி மற்றும் குழந்தையுடன் மாதம் ஒருமுறையோ இருமுறையோ வந்து இவர்களைப் பார்த்துவிட்டுச் செல்லுவான். சீனிவாசனுக்கும் கமலம்மாளுக்கும் பேரன் ஹரி தான் உலகம். அவனுக்கோ இவர்களிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. தன் அம்மாவைப் போலவே..

நாளை தீபாவளிக்கு வரப்போகும் மகன், மருமகள் மற்றும் பேரனுக்கான புத்தாடைகளை எடுத்து பூஜை அறையில் தயாராய் வைத்துவிட்டு வந்த கமலம்மாள், "என்னங்க... ஸ்ரீதர் காலைல எத்தனை மணிக்கு பேரனை அழைச்சிக்கிட்டு வருவான்னு ஒரு போன் போட்டுக் கேளுங்களேன்..." என்றார்.

சரி என்றவர், தொலைபேசியை கையிலெடுத்தார்.

"ஹலோ... ஸ்ரீதர்.. அப்பா பேசறேன்டா..."

"சொல்லுங்கப்பா.."

"நாளைக்கு தீபாவளி.. நீங்க எல்லாம் எத்தனை மணிக்கு வருவீங்கன்னு..."

சொல்லி முடிப்பதற்குள் முந்திக்கொண்டான் ஸ்ரீதர்...

"இல்லப்பா... நாளைக்கு நாங்க வரல..."

"ஏன்டா. என்னாச்சு...??"

"பின்னே என்னப்பா.. போன தடவை வந்தபோது நீங்க ஹரிய தூக்கி கொஞ்சியிருக்கீங்க.. உங்க தீக்காயத்தைப் பார்த்து பயந்து அவனுக்கு ரெண்டு நாள் ஜுரமே வந்துடுச்சு.. அதனால... நல்ல நாளும் அதுவுமா எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கணும்னு உங்க மருமக சொல்றாப்பா... புரிஞ்சுக்குங்க.. நான் காலையில் பேசறேன்.. வைக்கிறேன்..."

பதிலுக்குக் காத்திராமல் மறுமுனை துண்டிக்கப் பட்டது.

"என்னங்க சொன்னான்...??" ஆவலுடன் கேட்டார் கமலம்மாள்...

விஷயத்தை சொல்லி முடிப்பதற்குள் கமலம்மாளின் கண்களை கண்ணீர் தழுவியிருந்தது.

"எனக்கு மனசே சரியில்ல.. அந்த சட்டைய எடு.. நான் கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.." என்றபடி கிளம்பினார்.

கனத்த இதயத்துடன் இவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவும், குழந்தை சௌம்யா வேகமாக ஓடிவந்து இவரின் மேல் மோதிக் கொள்ளவும் சரியாக இருந்தது. அவள் கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டார்.

சட்டென இவர் கைகளைப் பார்த்தவள்... "அச்சச்சோ... தாத்தா கையில ஊஊஊ பட்டிருக்கே... வலிக்குதா தாத்தா??.." தன் பிஞ்சுக் கைகளால் அவர் வடுக்களை தடவியபடி கேட்டாள்...

பட்டென வாரி அணைத்துக் கொண்டவர்.. "இல்லடா கண்ணா... வா.. தாத்தா உனக்கு சுறுசுறு மத்தாப்பு வாங்கித் தரேன்..." என்று கண்ணீருடன் முத்தமிட்டார்.

மகிழ்ச்சியுடன் நடக்கத் துவங்கினார்கள் இருவரும்... பட்டாசுக் கடை நோக்கி...

Friday, October 9, 2009

மம்மிய ஷுட் பண்ணிடலாம்...

ரயில் பயணம் என்பது சுகமான ஒரு விஷயம். ஒவ்வொரு முறையும் பலதரப்பட்ட மக்களையும் ஒருசேர சந்திக்கும் வாய்ப்புண்டு. அதிலும் நாம் நண்பர்களுடன் குழுவாகப் போனால் கொண்டாட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இம்முறை நான் சொந்த அலுவல் காரணமாக தனியே பயணிக்கிறேன். இரு தினங்களுக்கு முன் நான் மேற்கொண்ட ஹைதராபாத் பயண அனுபவம் இதோ உங்கள் பார்வைக்கு...

********************

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....." என்று ஆரம்பித்து மூன்று மொழிகளில் ஏதோ ஒரு ரயில் கிளம்பவிருப்பதை அறிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்ணின் குரல்...
சென்ட்ரல் ஸ்டேஷனின் எட்டாவது பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த சென்னை-ஹைதராபாத் விரைவு ரயிலின் எனக்கான கம்பார்ட்மெண்டைத் தேடியபடி நடந்து கொண்டிருந்தேன்...

என் நேரம்... நீநீநீநீநீ....ளமான அந்த ரயிலின் கடைசியில் இருந்தது எனக்கான கோச்.. கொஞ்சம் விட்டால் என்ஜின் டிரைவர் பக்கத்துலயே சீட் கொடுத்திருப்பானுங்க போல.. அவ்வளவு தூரம்... அருகிருந்த கடையில் சில்லென்று ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு என் கோச்சை அடைந்தேன்..

முன்பதிவு செய்தபோதே தொல்லையில்லாமல் தூங்குவதற்கு வசதியாய் அப்பர் பெர்த் செய்திருந்தேன்.. அதனால் ஜன்னலோர சீட் கிடைக்க வில்லை.. அடடா.. தூங்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்திருக்கலாமே.. வடை போச்சே.. என்று நொந்து கொண்டே நான் கொண்டு சென்ற எனது பேக்-ஐ மேலே வைத்துவிட்டு எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்... ரயில் கிளம்ப இன்னும் சிறிது நேரம் மட்டும் இருப்பதை கடிகாரம் சொல்லியது...

சற்று நேரத்தில் இருக்கைகள் நிரம்பி என்னைச் சுற்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் ரீங்காரமிடத் துவங்கின... ரயிலும் மெதுவாய் நகரத் துவங்கியது.. என் டிக்கெட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த டிடிஆரிடம் ரயில் எத்தனை மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். சைடு-அப்பர் புண்ணியவான் ஒருத்தர் ரயில் வேகமெடுக்கத் துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் தெலுகு செய்தித்தாள் ஒன்றுடன் மேலேறிப் படுத்து விட நான் சென்று ஜன்னலோரம் அமர்ந்தேன்... பின்னோக்கியபடி நடக்கும் மரங்களும் மற்றவைகளும் காலமும் சற்று பின்னால் சென்று நாம் மகிழ்வாய் இருந்த கணங்களுக்குள் நம்மைத் தள்ளிவிடாதா என்று ஏங்க வைத்தன...

பெருமூச்சுடன் எதிரில் கவனித்தேன்.. தன் தாயின் மடியில் அமர்ந்து ஜன்னல் வழி வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் அந்த குட்டிப் பையன்.. மூன்று அல்லது மூன்றரை வயதிருக்கலாம் அவனுக்கு... என்னைப் பார்த்தும் சிரித்தான்.. என்னிடம் அழைத்தேன்.. உடனே ஒட்டிக் கொண்டு விட்டான்... கவின்.. அது தான் அவன் பெயராம்.. உன் பெயரில் பால் எல்லாம் இருக்குடா என்றேன்.. "..தெரியுமே.. அத குடிச்சா வேகமா வளருவாங்களே.." என்றான்... விளம்பரங்கள் குழந்தைகளை மிகவிரைவாய் சென்றடைகின்றது என்பது எனக்கு விளங்கியது...

ஒரு இடத்தில நிற்காமல் கம்பார்ட்மெண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்... ரயிலுக்குள் விற்கும் ஒவ்வொரு பொருளையும் வாங்கித் தரும்படி தன் அம்மாவிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.. அவன் அம்மாவோ நீ அடம் பிடித்தால் அந்த அங்கிள் உன்னை தூக்கிட்டு போயிடுவார் என்று என்னைக் காட்டி சொன்னார்.. உடனே நானும் "சந்தோஷமாக" என்று சொல்லி சிரித்தேன்...

இவனை திசை திருப்புவதற்காக கையோடு கொண்டுவந்திருந்த "பிக்சர்ஸ் புக்"-ஐ கொடுத்தார்... அதிலிருப்பவைகளின் பெயரை எல்லாம் என்னிடம் தவறாகச் சொல்லிக் காட்டி சிரித்தான்.. பெயர் தெரியாத படங்களை "குவா-குவா-ஷாஷா" என்று சொல்லி சிரித்தான்.. அதன் அர்த்தம் புரியவில்லை.. ஆனால் அவன் சொன்ன விதம் பிடித்திருந்தது.. "குவா-குவா-ஷாஷா"... இந்த வார்த்தையை அவன் பலமுறை பயன்படுத்தினான்... மிகவும் அழகாக....

சிறிது நேரத்தில் எங்கள் அருகே பிளாஸ்டிக் பொம்மைகளை விற்றுக் கொண்டு வந்தார் ஒருவர்.. பத்து சீட் தள்ளியிருந்த ஒரு பெண்மணி எழுந்து வந்து இவன் எதிரில் தன் பிள்ளைக்கு ஒரு பிளாஸ்டிக் துப்பாக்கி பொம்மை வாங்கிக் கொடுத்தார்... அவ்வளவு தான்... தனக்கும் ஒரு துப்பாக்கி வேண்டுமென்று இவன் தனது அம்மாவிடம் மீண்டும் அடம் பிடிக்க ஆரம்பித்தான்.. எவ்வளவு கொஞ்சியும் கெஞ்சியும் அவன் அம்மா மசியவில்லை... சற்று நேரம் பொறுத்துப் பார்த்த பொம்மை வியாபாரியும் அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று விட்டார்... துப்பாக்கி பொம்மை வாங்கிய அந்த குழந்தைக்கும் இவன் வயது தான் இருக்கும்.. அது வேண்டுமென்றே நிமிடத்திற்கொருமுறை இவனிடம் ஓடிவந்து சுடுவது போல் காட்டி விட்டு போய்க்கொண்டிருந்தது... இவன் கிட்டத்தட்ட அழுதே விட்டான்... மீண்டும் அந்த பொம்மைக்காரர் வந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லி நான் சமாதானப் படுத்தியபின் தான் அமைதியானான்... ஆனால் ஐந்து நிமிடத்திற்கொருமுறை என் இன்னும் அந்த பொம்மைக்காரர் வரவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தான்..

அப்படி இப்படியென்று ரயில் நெல்லூரை நெருங்கியிருந்தது. ஒரு காபி வாங்கிக் குடித்துவிட்டு டின்னர் என்ன வேண்டும் என்று கேட்ட IRCTC நபரிடம் வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தேன். எட்டு மணிவாக்கில் வெஜிடபிள் பிரியாணியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் நாற்பது ரூபாயை வாங்கிக் கொண்டு போனார் அந்த நபர்.

கவினுக்குப் பசி எடுத்திருக்கும் போல.. அவன் அம்மா கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு இட்லியும் சட்னியும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். அப்போதும் அவன் எனக்கு துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தான். நான் அவனிடம், "நீ ஒழுங்காக சாப்பிட்டால் அங்கிள் உனக்கு வாங்கித் தருவேன்" என்று சொல்லி சாப்பிட வைத்தேன். ஒருவழியாக இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டான். நானும் எனது வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட்டு முடித்தேன்.

சிறிது நேரம் கழித்து கவினுக்கு குட்நைட் சொல்லிவிட்டு என் பெர்த்தின் மேலேறிப் படுத்தேன். அப்போதும் கவின் அந்த துப்பாக்கி வைத்திருக்கும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கிப் போய்விட்டேன். சரியாகக் காலையில் ஐந்து மணிக்கு விழிப்பு வந்தபோது ரயில் செகந்திராபாத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கவின் தூங்கிக் கொண்டிருந்தான். கவினின் அம்மா அவன் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். நான் இறங்கிச் சென்று முகம் கழுவி விட்டுவந்தேன். ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. கவினை அவன் அம்மா எழுப்பினார். எழுந்ததும் என்னைப் பார்த்து சிரித்தவன், துப்பாக்கி பொம்மை வாங்கிட்டீங்களா?? என்று கேட்டான். நானும் ரயிலில் இருந்து இறங்கியதும் வாங்கித்தருகிறேன் என்று சொன்னேன். அப்போதும் கவினின் அம்மா அவனை அதையெல்லாம் வாங்கக் கூடாது என்று அதட்டினார். உடனே என் காதருகில் வந்தவன், "நீங்க வாங்கித் தாங்க அங்கிள்... இந்த மம்மிய ஷுட் பண்ணிடலாம்.." என்று கூறி சிரித்தான்.

ரயில் நின்றது. கவினின் அப்பா அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவரைப் பார்த்தும் தாவிச் சென்றவன், "அங்கிள்.. மறக்காம எனக்கு துப்பாக்கி பொம்மை வாங்கிட்டு வாங்க" என்று சொல்லி கையசைத்து விடை பெற்றான். நானும் "கண்டிப்பாக வாங்கித் தருகிறேன்" என்று புன்னகையுடன் விடைபெற்றேன்..

அடுத்தமுறை கவினைப் பார்க்கும் போது அவனுக்குக் கண்டிப்பாக ஒரு துப்பாக்கி பொம்மை வாங்கித் தர வேண்டும்!!!