Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Sunday, March 28, 2010

பதிவர்கள் சங்கம் / சங்கமம் - அடுத்தது என்ன?

நேற்று நடைபெற்ற, பதிவர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான சந்திப்பிற்கு நானும் சென்றிருந்தேன். ஏற்கனவே அறிமுகமான/அறிமுகமில்லாத பதிவர் நண்பர்களையும், சங்கம் துவக்குவதில் இருக்கும் சாதக/பாதகங்கள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் சந்திக்க நேர்ந்தது. நானும் என் சிற்றறிவுக்கு(?) எட்டிய சில சந்தேகங்களை எழுப்பினேன்.

பதிவர்கள் தனித்தனி குழுக்களாக செயல்படாமல் ஒருங்கிணைந்து ஒரே குழுமமாய், குடும்பமாய் இயங்கும் வசதியை அமைத்துத் தரவிருக்கும் இந்த பதிவர் சங்கம் அமைக்கும் ஆலோசனையை நான் முற்றிலும் வரவேற்கிறேன். கிட்டத்தட்ட அங்குவந்திருந்த அனைவரின் மனோநிலையும் அப்படித் தான் இருந்தது.

ஆனால், ஒரு குழுவாய் எப்படி இயங்கப் போகிறோம், ஒவ்வொருவரின் பங்களிப்பு என்ன, இதன்மூலம் பதிவர்களுக்கும், பதிவர்களால் மற்றவர்களுக்கும் ஏற்படப் போகும் நன்மை/தீமைகள் என்னவாக இருக்கும், பொதுவில் ப்ளாக் என்பது நம் சொந்த விருப்பு வெறுப்புகளையும், படைப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாயிற்றே; இதில் தனி நபர் சுதந்திரம் (இப்ப மட்டும் என்ன வாழுது) எத்துனை முக்கியத்துவம் பெறும் போன்ற அடிப்படை கேள்விகள் தான் எனக்குள் எழுந்தவை...

உண்மையைச் சொல்லப் போனால் இவைபற்றித் தான் நேற்று விவாத்திருக்க வேண்டும். ஏனெனில் வந்திருந்த அனைவருக்குமே ஒருகுழுவாய் நாம் சங்கமிக்கப் போகிறோம் என்கிற உணர்வுடன் மட்டுமே அங்கு கூடியிருந்தார்கள். திரு.ராதாகிருஷ்ணன் ஐயா, திரு.நர்சிம், திரு.டோண்டு, திரு.அர்விந்த்(பெங்களூர்), திரு.லக்கி ஆகியோரின் பேச்சுக்களும் அவ்வண்ணமே இருந்தது. ஆனால்.. சங்கம் வேண்டுமா, வேண்டாமா என்கிற ரீதியில் விவாதம் திசை திரும்பியது மாதிரி ஒரு உணர்வு.

காரணம், நான் முன்பு கூறியதுபோல் அடிப்படையான விஷயங்களை சரியாக தயார் செய்திராமல், நேரடியாக விவாதத்தை துவக்கியது தான். "அத்தியாவசிய நேரங்களில் பதிவர்கள் தங்களுக்குள் தங்களாலான உதவிகளை செய்யவும், பெற்றுக் கொள்ளவும் இந்த சங்கம் ஒரு காரணமாய் இருக்கட்டும்" என்ற நர்சிம்'மின் பேச்சு மட்டுமே ஆரோக்யமான சிந்தனையாய்ப் பட்டது. (அவரை முன்னால் பேச அனுமதித்திருக்கலாம்.. ஒருவேளை சந்திப்பு ஓரளவிற்காவது சரியான திசையில் சென்றிருக்கும்.)

அதைவிடுத்து, கூகிளைப் போய் கேட்கலாம், அரசாங்கத்தைப் போய் கேட்கலாம், அவங்களைப் போய் கேட்கலாம், இவங்களைப் போய் கேட்கலாம், ஊர் கூடினாத் தான் தேர் இழுக்க முடியும், ஒத்தை மரம் தோப்பாகாது என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது அசுவாரஸ்யமாய் இருந்தது.

நாம் அடுத்தகட்டம் நோக்கி செல்லும்போது அதற்கான முன்னேற்பாடுகளையும், அவ்விடத்தில் நமக்கான பணியென்ன, நமது பங்களிப்பு என்ன ஆகிய குறைந்தபட்ச விஷயங்களையாவது சிந்திக்க வேண்டும். அப்போது தான், நம் நகர்வும் ஆக்கப் பூர்வமாய் இருக்கும். அப்புறம் பார்த்துக்கலாம், அங்க போய் பண்ணிக்கலாம் என்பதெல்லாம் கதைக்கு ஆகாது.

நமது அடுத்த சந்திப்பில் இதுபற்றி மட்டுமே பேசுவோம். இது தான் என் கருத்து. மற்றபடி, சங்கம் வேண்டுமென்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த சங்கத்தில் இணைய விரும்புவோருக்கு வசதியாய் மின்னஞ்சல் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.. (tamilbloggersforum@gmail.com) நான் அனுப்பியாச்சு.. அது தொடர்பான நண்பர் "பலாபட்டறை" ஷங்கர் அவர்களின் பதிவு இங்கே!

Wednesday, February 17, 2010

பதிவர்கள் புத்தகங்கள்...சின்னதாய் ஒரு அலசல்

பதிவுலக நண்பர்கள், திரு.நர்சிம், திரு.பரிசல்காரன், திரு.கேபிள் சங்கர் ஆகிய மூவரும் தங்கள் முதல் படைப்பை சிறுகதைத் தொகுப்புகளாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.. அது எங்களுக்குத் தெரியும்.. நீ என்ன சொல்லவந்த.. அதை சொல்லு முதல்ல.. அப்படின்னு சொல்றீங்களா??? ரைட்டு..

இவர்களின் இந்தக் கதைகள் எல்லாம் ஏற்கெனவே, இவர்களின் பதிவுகளில் படித்தது தான் என்றாலும், புத்தகமாய் அதைக் காணும் பொழுது ஒரு இனம்புரியா சுவாரஸ்யம்.. மூன்று புத்தகங்களையும் ஒரே மூச்சில் தான்(வெவ்வேறு நாட்களில்) படித்தேன் என்றாலும் நான் படித்த வரிசையிலேயே பகிர்ந்து கொள்கிறேன்..

==========================================

அய்யனார் கம்மா: (ஆசிரியர்: நர்சிம்)

நான் காசு கொடுத்து வாங்கிய முதல் சிறுகதை புத்தகம்.. மொத்தம் பதிமூன்று கதைகள்.. இதில் முதல் கதையே அய்யனார் கம்மா தான்.. அழகான கிராமத்துக்கு நம்மை கூட்டிப் போய், மாட்டுக்கு லாடம் அடிப்பதைக் காட்டித் தந்து, வெள்ளந்திப் பேச்சுகளின் சுவாரஸ்ய நடையினூடே நம்மையும் அறியாமல், சற்று நேரத்தில் கதையின் நாயகன் செய்யப் போகும் கொலைக்கு நம்மையும் சாட்சியாக்கி விடுகிறார். இந்தக் கதையில் என்னை மிகக் கவர்ந்த வரிகள்.. ஒரு மாட்டின் உரிமையாளர், லாடம் அடிப்பவனிடம் சொல்லும் "எம்புட்டு பாரம்ண்டாலும் இழுத்துப் புடும்யா எந்தெய்வம்".. தான்.. அந்த வரியில் தான் எத்துனை நன்றி கலந்த நம்பிக்கை..
அடுத்த கதை.. தந்தையுமானவன்.. என்னை பொறுத்தவரை நர்சிம்மின் மாஸ்டர் பீஸ்.. பிறந்த அன்றே குழந்தையை எமனிடம் வாரிக் கொடுப்பதென்பது எத்தனைப் பேருக்கு நடந்திருக்கும்? இருந்தாலும் அந்த தந்தையின் மனவேதனையை படிப்பவர்களும் புரிந்து கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ இயலுமா??... முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தன் எழுத்தால்.. இந்தக் கதையின் வீச்சு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.. படிக்காதவர்கள் தேடித் பிடித்து படிக்கவும்..

தொடர்ந்து வரும் கதைகளில் வெகு லாவகமாய் தேர்ந்த வரிகளின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் நம்முள் விதைத்துச் செல்கிறார் நர்சிம்.. (உ.ம்:: செம்பட்டைக் கிழவி, ம'ரணம்', சந்தர்ப்ப வதம்).. நகைச்சுவைக்கு "தலைவர்கள்", மற்றும் "வெத்தலைப் பெட்டி" ஆகியவையும் உண்டு..


============================================

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்
(ஆசிரியர்: பரிசல்காரன்)


கவித்துவமான புத்தகத் தலைப்பு.. 17 கதைகள், 71 பக்கங்கள்... முதல் கதையான "தனிமை-கொலை-தற்கொலை"யில் கதையின் நாயகனின் நட்பும் காதலும் நிறைந்த குழப்பமான மனநிலையை பரபரப்பான சொற் பிரயோகங்கள் மூலம் படிக்கும் நம்மிடம் தந்துவிடுவது மிகச் சிறப்பு.. கிட்டத்தட்ட எல்லா கதைகளையும், கதையின் நாயகனே நம்மிடம் விவரிப்பது போல் இருப்பதால், ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மால் காட்சிகளையும் கதையின் முக்கிய பாத்திரங்களையும் அருகிலிருந்து கவனிக்க முடிகிறது.. பரிசல் தனது வழக்கமான நேர்த்தியான மற்றும் தெளிந்த எழுத்து நடையில் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார், ஒரு பிரச்சனையும் இல்லாமல்..

பட்டர்பிளை எப்ஃபெக்டும், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதையும் சிம்ப்ளி சூப்பர்ப்.. இவரின் எல்லாக் கதைகளிலும் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் நாம் அனைவரும் சந்தித்திருக்கக் கூடிய அல்லது அதிகம் கேள்விபட்டிருக்கக் கூடிய ஒரு நபரை நம் கண்முன் நிறுத்துவதால், நம்மால் இன்னும் ஆழ்ந்து வாசிக்க முடிகிறது.. (உ.ம்:: மாற்றம், நட்பில் ஏனிந்த பொய்கள், ஸ்டார் நம்பர் ஒன்..)

மேலும், நான் அவன் இல்லை, கைதி, மனசுக்குள் மரணம் போன்ற சஸ்பென்ஸ் நிறைந்த கதைகளும், உணர்வுகளின் வலியை வருடிக் கொடுக்கும் மயிலிறகுகளாய் இருளின் நிறம், நட்சத்திரம் ஆகிய கதைகளும் உண்டு..


===============================================

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. (ஆசிரியர்: கேபிள் சங்கர்)


"முத்தம்" என்ற சுறுசுறு கதையில் ஆரம்பித்து மொத்தம் பதிமூன்று கதைகள்.. சொன்னது போலவே, விறுவிறுப்பான நடையில் புதிய தளங்களில் அமைந்துள்ளது எல்லா கதைகளும்.. கேபிள் சங்கர் அவர்கள், திரை-இயக்குனர் என்பதால் காட்சிப் படுத்தல்கள் வெகு இயல்பாய் அமைவது கதைகளுக்கு கூடுதல் பலம்..

இரண்டாவது கதையான "லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்" வாழ்கை வாழ்வதற்கே என்பதை அழுத்தமாய் பதிவு செய்கிறது.. முக்கால்வாசிக் கதைகளில், வர்ணனைகள் காமத்தின் உச்சம் தொட்டு திரும்புகின்றது.. ஆனால் அவை அந்தந்த கதைக்குத் தேவையானவைகள் தான் என்பது வாசிப்பு நிறைவுறும் போது கவனத்துக்கு வருகிறது..

மிகச்சிறந்த கதைகளென்று குறிப்பிட வேண்டுமானால், காதலின் வீரியம் சொல்லும் "மாம்பழ வாசனை" மற்றும் உறவுகளின் உள்ளம் சொல்லும் "நண்டு" ஆகியவற்றைச் சொல்லலாம்.. "ஆண்டாள்", "துரை-நான்-ரமேஷ் சார்" இரண்டும் கூட மேற்சொன்ன வகையறாவே..

"போஸ்டர்", "காமம் கொல்", "ராமி-சம்பத்-துப்பாக்கி" ஆகிய சுவாரஸ்ய திருப்பங்கள் நிறைந்த கதைகளும் உண்டு..


======
சரி.. இவ்வளவு சொன்னியே, ஒரு குறையும் இல்லையா அப்படின்னு கேட்டீங்கன்னா, நிச்சயம் சிறுசிறு குறைகள் இருக்கு... பதிவில் படித்தபோது இருந்த டெம்போவுக்கும், புத்தகமாய் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்துக்கும் சற்றேறக்குறைய வித்தியாசம் தெரிகிறது.. ஒரு சில கதைகள் சட்டென முடிந்துவிடுவது போன்ற பிரமையும் ஏற்படுகிறது..

ஆனால்.. ஒட்டுமொத்தமாய் பார்க்கும்போது.. இவைகள் அனைத்தும் எளிதில் களையக் கூடியவை தான் என்பதும், இவர்களின் எதிர்வரும் படைப்புகளில் இவை நிச்சயம் காணப்படாது என்பதுமே நான் புரிந்து கொண்டது..

எனவே, முடிந்தவர்கள் இந்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.. வாழ்த்துங்கள்..!!!

Tuesday, February 16, 2010

கிரிக்கெட் - பிடித்ததும் பிடிக்காததும்

எனக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள உறவு எப்படிப் பட்டதுன்னா... நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன்..( டேய், நீ இப்போவரைக்கும் அவ்வளோ தானடா படிச்சிருக்கே) சரி விடுங்க.. விஷயத்துக்கு வருவோம்..
================================================================
பதிவர் நண்பர் மோகன் குமார் கிரிக்கெட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார்.

வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? சச்சின், லாரா

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? சாஹித் அப்ரிடி (அதிரடி தவிர எல்லாமே அழுகுணி தான்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் க்ளென் மெக்ராத்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் தில்ஹாரா பெர்னாண்டோ

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, முரளிதரன்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் சச்சின், ஷேவக், பாண்டிங்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் மிஸ்பா உல் ஹக்

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் கில்க்ரிஸ்ட், கங்குலி, மைக் ஹஸ்ஸி

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் ரஸ்ஸல் அர்னால்ட்

11. பிடித்த களத்தடுப்பாளர் ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் இன்சமாம் உல் ஹக்

13. பிடித்த ஆல்ரவுண்டர் பிளின்டாப், சைமண்ட்ஸ்

14. பிடித்த நடுவர் சைமன் டாபல், டேவிட் ஷெபெர்ட்

15. பிடிக்காத நடுவர் அசோகா டீ சில்வா, அமீர் சாயீபா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் சித்து, ரவிசாஸ்திரி, ஹர்ஷா போகலே, சுனில் கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் டோனி கிரெய்க் (நம்மாளுங்க தூக்கி அடிச்சாலே அவுட்'ன்னு கத்துவார்)

18. பிடித்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா

19. பிடிக்காத அணி ஒப்புக்கு ஆடும் நாடுகள்

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா - பாகிஸ்தான், இந்தியா -ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- ஜிம்பாப்வே - பங்களாதேஷ்

22. பிடித்த அணி தலைவர் ஹான்சி குரோன்யே, சவ்ரவ் கங்குலி

23. பிடிக்காத அணித்தலைவர் யூனுஸ் கான்

24. பிடித்த போட்டி வகை ட்வென்டி ட்வென்டி

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிரிஸ்ட்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி சிவ சுந்தர் தாஸ் மற்றும் சடகோபன் ரமேஷ்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் சச்சின், லாரா

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் சச்சின்


நான் அழைக்கும் பதிவர்கள்:

நர்சிம்
நாஞ்சில் பிரதாப்
ரோமியோ பாய்

Wednesday, November 4, 2009

10/10 — பிடித்ததும், பிடிக்காததும்

என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நண்பர் நர்சிம்மிற்கு நன்றிகள்.

***************************

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

*****
இதோ எனது பதில்கள்:

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ராகுல் காந்தி (தன் தந்தையைப் போன்றே வசீகரம்)
பிடிக்காதவர்: விஜய டி.ராஜேந்தர்

2. எழுத்தாளர்
பிடித்தவர்: சுஜாதா
பிடிக்காதவர்: நான் அதிகம் பேரை படித்ததில்லை என்பதால் அப்படி யாரும் இல்லீங்கோ.

3. கவிஞர்
பிடித்தவர்: வாலி
பிடிக்காதவர்: பேரரசு

4. இயக்குனர்
பிடித்தவர்: ஷங்கர்
பிடிக்காதவர்: (மீண்டும்) பேரரசு

5. நடிகர்
பிடித்தவர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பிடிக்காதவர்: சிபிராஜ்

6. நடிகை
பிடித்தவர்: அனுஷ்கா (அருந்ததி பார்த்ததிலிருந்து)
பிடிக்காதவர்: மகேஸ்வரி (யாருன்னு தெரியலையா? தப்பிச்சீங்க விடுங்க..)

7.இசையமைப்பாளர்
பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்: ஸ்ரீகாந்த் தேவா

8. தொழிலதிபர்
பிடித்தவர்: அம்பானி (சாமானியனிடமும் செல்போன் இருக்கக் காரணமானவர்)
பிடிக்காதவர்: விஜய் ஈஸ்வரன் (QuestNet மோசடி நிறுவனர்)

9. பதிவர்
பிடித்த பதிவர்: நர்சிம் (அவர் இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததால் மட்டுமல்ல)
பிடிக்காத பதிவர்: விரைவில்... (யாருமில்லன்றத எப்படி சொன்னேன் பார்த்தீங்களா)

10. விளையாட்டு
பிடித்தது: கிரிக்கெட்
பிடிக்காதது: Bullfighting (பாவம்.. அந்த மாட்ட உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசில கொன்னுருவானுங்க.. சிலநேரம் இவனுங்க உயிரும் போறதுண்டு..)

*******************************

தொடர அழைப்பது..

1. அவிய்ங்க ராசா
2. ஜாக்கி சேகர்

Thursday, October 22, 2009

பிரபல பதிவர்கள் – எனது பார்வையில்

முன் குறிப்பு:
இது முழுக்க முழுக்க, நான் வாசித்த, வாசித்துக் கொண்டிருக்கிற பிரபல பதிவர்களுடைய பதிவுகளின் அடிப்படையிலேயும், அவைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலேயும் மட்டுமே எழுதப் பட்டது.. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

முக்கிய குறிப்பு (அ) மூக்குக் குறிப்பு:
இதில் சம்பந்தப் பட்டவர்களோ, உடன்பாடு இல்லாதவர்களோ, அல்லது அப்படின்னா நாங்க எல்லாம் பிரபல பதிவர்கள் இல்லையா என்பவர்களும் இங்கயே கருத்து தெரிவித்துவிடுங்கள்.. நேரில் தனியாகக் கூப்பிட்டு மூக்கில் குத்தவேண்டாம்!!! (மூக்கு முக்கியமில்லீங்களா!!! அதான்!)

**********************************************************

ஓ.கே... வாங்க! ஒவ்வொருத்தரா பார்ப்போம்!!!

அனுஜன்யா:
ஆரம்பத்திலேயே குழப்பறேனா??? அவரோட கவிதைகள் படியுங்கள்.. அப்போது தான் புரியும், நானும் மற்ற சிலரும் கவிதை என்ற பெயரில் எழுதி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை.. இவரின் பல கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சங்ககாலப் புலவர்களின் அருகாமை இருந்தால் மட்டுமே சாத்தியம். விளக்கத்தை வார்த்தைகளுக்குள் ரகசியமாய் ஒளித்து வைக்கும் சூட்சுமம் அறிந்தவர். இலக்கியம் விரும்புவோரின் ஒரே சாய்ஸ்.

நர்சிம்:
வலைப்பக்கம் மூலம் மற்றவை மட்டுமல்ல மனிதம் வளர்க்கவும் முடியும் என்று அடிக்கடி நிரூபிக்கும் நபர். "கார்பொரேட் கம்பர்" என்று அழைக்கப் படுகிறவர். சங்கத் தமிழின் பல பாடல்களை தக்க விளக்கத்துடன் தருபவர். மலரும் நினைவுகளாய் இவர் எழுதும் பல பதிவுகள் நம் நினைவில் மலர்களாய் இருக்கும் எப்போதும். "ஏதாவது செய்யணும் பாஸ்" என்ற நல்ல என்'ணங்கள் கொண்டவர். ஒரே வருத்தம். பிரச்சனைகளின் போது இவர் எப்போதும் தனி ஆளாய் குரல் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கிறார். "நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்....."

பரிசல்காரன்:
"ரசிப்போர் விழி தேடி" என்று ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து ரசிக்கும் குணம் கொண்ட அனைவரும் இவரின் வழி தேடி வர வேண்டும். ஆழ்ந்த எழுத்துக்கள். எவர் மனமும் புண்படும்படி இவர் எழுதி நான் படித்ததில்லை. மென்மையாய் மட்டுமே இவர் எழுதினாலும் பல கருத்துக்கள் வன்மையாய் நம் மனதில் பதியும். அட்டகாசமான அவியல், அவ்வபோது கவிதைகள், கதைகள், நகைச்சுவை என்று தென்றலாய் வீசுபவர். ஒரே குறை: வேலைப்பளு காரணமாய் தென்றல் விட்டு விட்டு வீசும்.

கார்க்கி:
சரவெடி. விடாமல் எழுதிக் கொண்டே இருப்பார். எதைப் பற்றியாவது.. வாசகர் வட்டம் எவ்வளவு பெரியது என்பது இவரின் பல பதிவுகளின் மூலம் புலப்படும். பதிவுலகம் அடுத்தகட்டத்தை எட்ட விழைபவர்களில் இவரும் ஒருவர். ஏழு, காக்டெயில் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். தேவதை, புஜ்ஜி என்று புல்லரிக்க வைப்பார். திடீரென விஜய் பற்றிய விவாதங்களும், ஆங்காங்கே சில படு மொக்கைகளுமாய் நம்மை கிறுகிறுக்கவும் வைப்பார். மொத்தத்தில் கமர்ஷியல் கலவை.

கேபிள் சங்கர்:
வாசககர்களால் கேபிளார் என்றும், சக பதிவர்களால் "யூத்" என்றும் செல்லமாக அறியப்படுபவர். இப்போதெல்லாம் இவரின் விமர்சனம் படித்துவிட்டு தான், புதிதாய் வெளியாகும் படங்களுக்குப் போவதைப் பற்றி யோசிக்கிறேன். கொத்துபரோட்டா பரிமாறி வருவோரை பசியாற வைப்பவர். குறும்படங்கள், நிதர்சனக் கதைகள் என்று ஒவ்வொன்றும் நின்று விளையாடும் இவர் பதிவில். இவரின் ஹாட்-ஸ்பாட் பற்றியும் ஏ-ஜோக்ஸ் பற்றியும் சொல்லவில்லை என்றால் எனக்கு ரசனை கம்மி என்று அர்த்தம்.

ஜாக்கி சேகர்:
அட்டகாசமான சினிமா விமர்சகர். உலகப் படங்களைப் பார்த்து அதில் தான் ரசித்தவற்றை மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். முரட்டுத் தனமான எழுத்து நடை. ஆனால், வெகு சாதாரணத் தமிழிலேயே கருத்துக்கள் எளிதாக மக்களை சென்றடையும்படி பதிவிடுபவர். இவர் தன் மனைவியின்பால் கொண்ட அன்பு அடிக்கடி இவர் எழுத்துக்களில் பளிச்சிடும். இவர் ஒரு திங்க் குளோபல், ஆக்ட் லோக்கல் ஆசாமி. இவரும், கேபிள் சாரும் வெகு விரைவில் கோடம்பாக்கத்தைக் கலக்கப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

தாமிரா (அ) ஆதிமூலகிருஷ்ணன்:
எனக்குத் தெரிந்து இவர் பதிவுகளைத் தான் ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தேன் என்று நினைவு. அப்போது இவர் எடுத்த போட்டோக்களை எல்லாம் பதிவிடுவார். (கரெக்ட்டா சார்??).. அமர்க்களமாய் எழுதுவார். வெறும் எழுத்துக்களில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார். தங்கமணிகள் பற்றிய இவரின் ஒவ்வொரு பதிவும் கலக்கலாய் இருக்கும். அவ்வபோது சிக்ஸ் சிக்மா, போக்க யோகே(அப்படின்னாவா? என்னைக் கேட்டா???) என்றெல்லாம் எழுதி என் போன்ற மரமண்டைகளுக்கு பீதியைக் கிளப்புவார்.

அவிய்ங்க ராசா:
மதுரை பாணியில் (மதுரை சம்பவம் இல்லீங்க...) பதிவுகள் படிக்க வேண்டுமா?? யோசிக்காமல் இவர் பதிவை படிக்கலாம். பொதுவாக இவர் பதிவினை படிக்க ஆரம்பிக்கையில் ஆர்வத்தில் கண்கள் விரியும். முடியும்போது கண்கள் குளமாவது உறுதி. ஒன்று சென்டிமென்ட்டாக இருக்கும்.. அல்லது நகைச்சுவையாக இருக்கும். புனைவோ, சொந்த அனுபவங்களோ அவருக்கு ஏற்பட்ட அதே உணர்ச்சியை படிப்பவருக்கும் பரப்பி விடுவதில் கில்லாடி. முக்கியமாய் பதிவுலகைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர். அது அவரின் பல பதிவுகளில் புலப்படும்.


*************************

அவ்வளோ தாங்க... இவங்கள எல்லாம் கூர்ந்து கவனித்து தாங்க நானும் எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை... ஆனாலும் நீங்க இன்னொரு முறை முன்குறிப்பையும், மூக்குக் குறிப்பையும் படிப்பது எனக்கு நல்லது...!!!