Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, November 29, 2009

மொட்டை – சிறுகதை

waitingகாலை 8.20 மணி...

சென்னையின் மையப் பகுதியான ராதாகிருஷ்ணன் சாலை, பலதரப்பட்ட மக்களின் காலைநேர அவசரங்களுக்கு ஈடுகொடுக்கத் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது.. பள்ளி, கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விரைந்து கொண்டிருப்போரைப் பற்றி துளியும் கவலைப்படாமல், இன்னும் சற்றுநேரத்தில் வரவிருக்கும் பேருந்திற்காக, சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் தன் பைக்கில் பதற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறான் மொட்டை.

மொட்டை??? அதுவல்ல அவன் பெயர்.. ஆனால் அதுபற்றி உங்களுக்கென்ன?? அம்மு அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்... அம்மு... அவளைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது... ஏனெனில், யாரும் அவளைப்பற்றி பேசுவதை மொட்டை விரும்ப மாட்டான்.. எனவே, சுருக்கமாய் சொல்வதென்றால் அவள் ஒரு தேவதை... அவ்வளவுதான்..

ஆம் உங்கள் அனுமானம் சரி தான்.. அம்மு வரப்போகும் பேருந்திற்காகத் தான் மொட்டை காத்திருக்கிறான்... எதற்காகவா? சரி சரி.. பேருந்து வருவதற்குள் சட்டென விஷயத்தை சொல்லிவிடுகிறேன்..

அம்முவும் மொட்டையும் ஒரே நிறுவனத்தில் தான் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.. துவக்கத்தில் நட்பில் ஆரம்பித்த நெருக்கம் ஒரு கட்டத்தில் மொட்டையை காதல் என்ற கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.. எவ்வளவோ போராடி மறைக்க முயன்றும் முடியவில்லை.. எனவே, அம்முவிடம் தன் காதலை வெளிப்படுத்திவிட்டான். அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும்.. என்றாலும், யோசித்துச் சொல்வதாய் சொல்லியிருக்கிறாள். அம்மு சொல்லப் போகும் பதிலுக்காக அதிகாலையிலே எழுந்து, குளித்து, கோவிலுக்கெல்லாம் போய் வந்து, இப்போது இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே காத்துக்கொண்டிருக்கிறான் மொட்டை. ஆம்.. அவள் இங்கு தான் இறங்குவாள்..

அதோ.. தூரத்தில் வாகன நெரிசலுக்கிடையே பேருந்து தெரிய ஆரம்பித்துவிட்டது... வந்ததும் அம்மு என்ன சொல்லப் போகிறாளோ என்ற ஆவலுடன் எழுந்தவனை தோளில் தட்டியது ஒரு கை...

"என்னடா.. கிளம்பலாமா???".... ஏடிஎம்-மின்னின்றும் வெளிப்பட்ட மொட்டையின் நண்பன் ரகு கேட்டான்...

ஒருகணம் திகைத்து, பின், நினைவுகளிலிருந்து மீண்ட மொட்டையை கவனித்த ரகு...

"டேய்... இன்னும் அவளையே நினைச்சிட்டிருக்கியா??? அவ தான் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் ரெண்டு வருஷமாச்சே.. விட்டுத் தள்ளேண்டா" என்றபடி பைக்கை உயிர்ப்பித்தான்.

ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தபடி பைக்கின் பின்னாலமர்ந்த மொட்டையால், அம்மு ஏன் பதிலே சொல்லாமல் போய்விட்டாள் என்ற கேள்வியை மட்டும் விட்டுத் தள்ளவே முடியவில்லை..

Sunday, October 18, 2009

தீபாவளி – சிறுகதை

அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
இது என் முதல் முயற்சி.. முன்பே யோசித்து வைத்திருந்ததை தீபாவளிக்காக சற்று மாற்றியமைத்து இருக்கிறேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்.. நன்றி!!!

*********************
diwali
விடிந்தால் தீபாவளி...

"எனக்கு சுறுசுறு மத்தாப்பு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........." மூன்று வயது சௌம்யாவின் குரல் அந்த பிளாட்டின் இரண்டாவது மாடி முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது...

வேணாம்டா செல்லம்... அப்புறம் உன் கையில "ஊஊஊ" பட்டுடும்.. என்று சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார் அவளின் அப்பா..

சத்தம் பொறுக்காமல் கதவை மூடிவிட்டு வந்தார் சீனிவாசன்.

"அப்பப்பா... குழந்தையா அது?? என்ன கத்து கத்துது??? ரெண்டு நிமிஷம் டிவியில் நியூஸ் பார்க்க முடியுதா...? அடுத்த அசோசியேஷன் மீட்டிங்கில் கம்ப்ளைண்ட் பண்ணனும்" என்றவாறே இருக்கையில் அமர்ந்தார்..

"நான் கூட உங்ககிட்ட சொல்லனும்னு நெனைச்சேங்க... சில சமயம் அந்த குழந்தை போடற சத்தத்துல மதியத்துல தூங்கவே முடியறதில்ல..." - இது சீனிவாசனின் மனைவி கமலம்மாள்...

சீனிவாசன். தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் அடையாளமாக கை, கால், முகம் என அங்கங்கு சிறுசிறு தீக்காயங்களின் வடுக்கள் உண்டு அவருக்கு. கமலம்மாள் கணவன் குணமறிந்து நடக்கும் இல்லாள். இவர்களின் ஒரே மகன் ஸ்ரீதர். கல்யாணமான கொஞ்ச நாளிலேயே மனைவியுடன் தனிக்குடித்தனம் போய்விட்டான். தன் மனைவி மற்றும் குழந்தையுடன் மாதம் ஒருமுறையோ இருமுறையோ வந்து இவர்களைப் பார்த்துவிட்டுச் செல்லுவான். சீனிவாசனுக்கும் கமலம்மாளுக்கும் பேரன் ஹரி தான் உலகம். அவனுக்கோ இவர்களிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. தன் அம்மாவைப் போலவே..

நாளை தீபாவளிக்கு வரப்போகும் மகன், மருமகள் மற்றும் பேரனுக்கான புத்தாடைகளை எடுத்து பூஜை அறையில் தயாராய் வைத்துவிட்டு வந்த கமலம்மாள், "என்னங்க... ஸ்ரீதர் காலைல எத்தனை மணிக்கு பேரனை அழைச்சிக்கிட்டு வருவான்னு ஒரு போன் போட்டுக் கேளுங்களேன்..." என்றார்.

சரி என்றவர், தொலைபேசியை கையிலெடுத்தார்.

"ஹலோ... ஸ்ரீதர்.. அப்பா பேசறேன்டா..."

"சொல்லுங்கப்பா.."

"நாளைக்கு தீபாவளி.. நீங்க எல்லாம் எத்தனை மணிக்கு வருவீங்கன்னு..."

சொல்லி முடிப்பதற்குள் முந்திக்கொண்டான் ஸ்ரீதர்...

"இல்லப்பா... நாளைக்கு நாங்க வரல..."

"ஏன்டா. என்னாச்சு...??"

"பின்னே என்னப்பா.. போன தடவை வந்தபோது நீங்க ஹரிய தூக்கி கொஞ்சியிருக்கீங்க.. உங்க தீக்காயத்தைப் பார்த்து பயந்து அவனுக்கு ரெண்டு நாள் ஜுரமே வந்துடுச்சு.. அதனால... நல்ல நாளும் அதுவுமா எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கணும்னு உங்க மருமக சொல்றாப்பா... புரிஞ்சுக்குங்க.. நான் காலையில் பேசறேன்.. வைக்கிறேன்..."

பதிலுக்குக் காத்திராமல் மறுமுனை துண்டிக்கப் பட்டது.

"என்னங்க சொன்னான்...??" ஆவலுடன் கேட்டார் கமலம்மாள்...

விஷயத்தை சொல்லி முடிப்பதற்குள் கமலம்மாளின் கண்களை கண்ணீர் தழுவியிருந்தது.

"எனக்கு மனசே சரியில்ல.. அந்த சட்டைய எடு.. நான் கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.." என்றபடி கிளம்பினார்.

கனத்த இதயத்துடன் இவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவும், குழந்தை சௌம்யா வேகமாக ஓடிவந்து இவரின் மேல் மோதிக் கொள்ளவும் சரியாக இருந்தது. அவள் கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டார்.

சட்டென இவர் கைகளைப் பார்த்தவள்... "அச்சச்சோ... தாத்தா கையில ஊஊஊ பட்டிருக்கே... வலிக்குதா தாத்தா??.." தன் பிஞ்சுக் கைகளால் அவர் வடுக்களை தடவியபடி கேட்டாள்...

பட்டென வாரி அணைத்துக் கொண்டவர்.. "இல்லடா கண்ணா... வா.. தாத்தா உனக்கு சுறுசுறு மத்தாப்பு வாங்கித் தரேன்..." என்று கண்ணீருடன் முத்தமிட்டார்.

மகிழ்ச்சியுடன் நடக்கத் துவங்கினார்கள் இருவரும்... பட்டாசுக் கடை நோக்கி...