Sunday, November 29, 2009

மொட்டை – சிறுகதை

waitingகாலை 8.20 மணி...

சென்னையின் மையப் பகுதியான ராதாகிருஷ்ணன் சாலை, பலதரப்பட்ட மக்களின் காலைநேர அவசரங்களுக்கு ஈடுகொடுக்கத் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது.. பள்ளி, கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விரைந்து கொண்டிருப்போரைப் பற்றி துளியும் கவலைப்படாமல், இன்னும் சற்றுநேரத்தில் வரவிருக்கும் பேருந்திற்காக, சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் தன் பைக்கில் பதற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறான் மொட்டை.

மொட்டை??? அதுவல்ல அவன் பெயர்.. ஆனால் அதுபற்றி உங்களுக்கென்ன?? அம்மு அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்... அம்மு... அவளைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது... ஏனெனில், யாரும் அவளைப்பற்றி பேசுவதை மொட்டை விரும்ப மாட்டான்.. எனவே, சுருக்கமாய் சொல்வதென்றால் அவள் ஒரு தேவதை... அவ்வளவுதான்..

ஆம் உங்கள் அனுமானம் சரி தான்.. அம்மு வரப்போகும் பேருந்திற்காகத் தான் மொட்டை காத்திருக்கிறான்... எதற்காகவா? சரி சரி.. பேருந்து வருவதற்குள் சட்டென விஷயத்தை சொல்லிவிடுகிறேன்..

அம்முவும் மொட்டையும் ஒரே நிறுவனத்தில் தான் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.. துவக்கத்தில் நட்பில் ஆரம்பித்த நெருக்கம் ஒரு கட்டத்தில் மொட்டையை காதல் என்ற கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.. எவ்வளவோ போராடி மறைக்க முயன்றும் முடியவில்லை.. எனவே, அம்முவிடம் தன் காதலை வெளிப்படுத்திவிட்டான். அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும்.. என்றாலும், யோசித்துச் சொல்வதாய் சொல்லியிருக்கிறாள். அம்மு சொல்லப் போகும் பதிலுக்காக அதிகாலையிலே எழுந்து, குளித்து, கோவிலுக்கெல்லாம் போய் வந்து, இப்போது இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே காத்துக்கொண்டிருக்கிறான் மொட்டை. ஆம்.. அவள் இங்கு தான் இறங்குவாள்..

அதோ.. தூரத்தில் வாகன நெரிசலுக்கிடையே பேருந்து தெரிய ஆரம்பித்துவிட்டது... வந்ததும் அம்மு என்ன சொல்லப் போகிறாளோ என்ற ஆவலுடன் எழுந்தவனை தோளில் தட்டியது ஒரு கை...

"என்னடா.. கிளம்பலாமா???".... ஏடிஎம்-மின்னின்றும் வெளிப்பட்ட மொட்டையின் நண்பன் ரகு கேட்டான்...

ஒருகணம் திகைத்து, பின், நினைவுகளிலிருந்து மீண்ட மொட்டையை கவனித்த ரகு...

"டேய்... இன்னும் அவளையே நினைச்சிட்டிருக்கியா??? அவ தான் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் ரெண்டு வருஷமாச்சே.. விட்டுத் தள்ளேண்டா" என்றபடி பைக்கை உயிர்ப்பித்தான்.

ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தபடி பைக்கின் பின்னாலமர்ந்த மொட்டையால், அம்மு ஏன் பதிலே சொல்லாமல் போய்விட்டாள் என்ற கேள்வியை மட்டும் விட்டுத் தள்ளவே முடியவில்லை..

Wednesday, November 11, 2009

This Is It: ஒரு அற்புத அனுபவம்!



நான் ஒன்றும் மைக்கேல் ஜாக்சனின் ரசிகன் கிடையாது. அவரைத் திரையில் பார்த்ததும் மைக்க்க்க்கே......ல்ல்ல்ல் என்று அலறுபவனில்லை நான். அவரது பாடல்களின் (புரியப் போவதுமில்லை என்பது வேறு விஷயம்) அடிமை கிடையாது. ஆனால் அவரின் மறைவுக்குப் பின் வந்த, வந்துகொண்டிருக்கிற செய்திகளை அவ்வபோது கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு, சமீபத்தில் வெளியான This Is It திரைப்படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இன்று தான் அமைந்தது.

மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் தனது அடுத்த இசைச் சுற்றுப்பயணமான This Is It -க்கு அவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்வதையும், அதில் பங்குபெறும் மற்ற கலைஞர்களின் பேட்டிகளையும் மட்டுமே தொகுத்து வெளியாயிருக்கும் டாகுமெண்டரி படம் தான் This Is It.

சும்மா சொல்லக் கூடாது. அந்த மனிதரின் பெயரும் முகமும் திரையில் தெரியும்போது நம்மவர்களே போட்ட ஆனந்தக் கூச்சல் இருக்கிறதே.. எனக்கும் கொஞ்சம் சிலிர்த்துப் போய் விட்டது. ஐம்பது வயதென்று நம்ப முடியாத தோற்றமும் அவரின் நடன அசைவுகளும்... வாவ்... முக்கால் செகண்டுக்குள் அவரின் அங்கங்கள் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அனாயாசமாய் அசையும் அழகு இருக்கிறதே.. இப்போதுதான் தெரிகிறது... அவர் ஏன் உலகளாவிய ரசிகர்களை இந்தளவு கவர்ந்திருக்கிறார் என்று...

ஆனால் அவர் இறந்ததும், அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார், எலும்பும் தோலுமாய் இருந்தார், நடக்க முடியாமல் அவதிப்பட்டார் என்று எத்தனை செய்திகள். அத்தனையும் பொய்யென்று நிரூபிக்கிறது அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடன அசைவுகள். சக கலைஞர்களெல்லாம் 20-25 வயதுக்குட்பட்டவர்கள். ஆனால் அவர்கள் தான் அவருடன் ஈடுகொடுத்து ஆட முயன்று கொண்டிருந்தார்கள் என்றே கருதுகிறேன் நான்.

சத்தியமாய் அவரின் எந்த ஆல்பத்தையும் நான் இதற்குமுன் பார்த்திருக்காவிடினும், இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக அத்தனையும் ஒருசேரப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது. அவரின் ""Love Lives Forever"" என்ற வாசகத்துடன் நிறைவு பெறுகிறது படம்.

மைக்கேல் ஜாக்சனின் இந்த இசைக் காவியத்தைப் பார்க்க அடிப்படைத் தேவைகளாக நான் உணர்ந்தது இதைத்தான்...

அவரின் ரசிகனாக இருத்தல்??
குறைந்த பட்சம் அவரின் பாடல்களைப் பற்றிய முன்னறிவு??
மேற்கத்திய இசையின் மீது நாட்டம்???

ஒரு மண்ணும் இல்லை...!!!

இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் போதும்... மற்றதை மைக்கேல் ஜாக்சன் பார்த்துக் கொள்வார்.

Sunday, November 8, 2009

பாழாய்ப் போன "காதல்" கவிதைகள்


நான் காணும் அனைத்தும்
ஏதாவது ஒருவகையில்
உன்னை நினைவூட்டுகின்றன

உன்னை நினைவூட்டும் வகையில்
ஏதாவது இருக்காதா என்ற
தேடலுடன் மட்டுமே
அனைத்தையும் காண்கிறேன்
நான்!!!


**********************************

மருத்துவமனை சென்றிருந்தேன்...

என் ரத்தம் பரிசோதித்த பின்
மருத்துவன் சொன்னான்..
இது ஏதோ புது வகையைச்
சேர்ந்ததென்று..
மருத்துவ உலகின் அதிசயமாய்
இருக்கக் கூடுமென்று...

இன்னும் ஏதேதோ புலம்பினான்
பைத்தியக்காரன்..

பாவம்.. அவனுக்கெப்படித் தெரியும்???
என் ரத்த அணுக்கள்
எப்போதோ உன் பெயருக்கு
மாறிவிட்ட விஷயம்!!!

***************************************

எல்லா மொழிகளிலும்
தேடி விட்டேன்...

நீ உதடு சுழிப்பதற்கு
இணையான கவிதையை
வரைவதற்கு வார்த்தைகளே
இல்லை....

Friday, November 6, 2009

மெரீனாவில் நோ கிரிக்கெட்: என்ன கொடுமை சார் இது???

இப்ப தாங்க.. ஜெகன் போன் பண்ணினான். விஷயம் கேள்விப்பட்டதும் ரொம்ப வருத்தமா போச்சு.. விஷயம் இதுதான்...

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியவர்களை போலீஸார் விரட்டிவிட்டார்கள். நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறாக இவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததால் இந்த நடவடிக்கை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவோர் டென்னிஸ் பந்துகளையே பயன்படுத்துகிறோம். எனவே யாருக்கும் அடிபட்டு, காயம் ஏற்பட வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்தவரை நடைப்பயிற்சி செய்வோரே சற்று நேரம் நின்று இந்த கிரிக்கெட்டை ஆர்வமுடன் பார்த்துவிட்டுப் போவார்களே தவிர, இத்தனை ஆண்டுகளாக எந்த நடைப்பயிற்சி அமைப்புகளும் இதுபோன்று புகாரெல்லாம் தந்ததில்லை.

-----------------

சனி ஞாயிறுகளில், பட்டினம்பாக்கம் தொடங்கி அண்ணா நீச்சல் குளம் வரை, தங்களைத் தானே சச்சினாகவும், பிரெட் லீயாகவும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் கிரிக்கெட் விளையாடும் 2000-3000 பேர்களில் நானும் ஒருவன்.

சனிக்கிழமை இரவே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். நாளை எதிர்த்து ஆடப் போகும் அணியின் ஜாதகம் அலசப்படும். சென்றமுறை அவர்களிடம் கேவலமாய் தோற்றது நினைவில் நாட்டியமாடும். "மச்சான், இந்தமுறை(யாவது) ஜெயிச்சுடனும்டா" ஒருவருக்கொருவர் உறுதிமொழி எல்லாம் பின்னி பெடலெடுக்கும். தூங்கப் போனால், கனவில் கூட, போன மேட்ச் வாங்கிய உதை வந்து இம்சை பண்ணும்.

ஞாயிறு விடிந்ததும் அணியைத் திரட்டிக் கொண்டு (இது ஒரு பெரிய கலை)... பீச்சுக்கு போய் பிட்ச் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துடும். ஒரு வழியாய் எதிரணி வந்து டாஸ் போட்டு, முந்தைய நாளிரவில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றிருந்தாலும், நாங்கள் இந்த (சப்பை) அணியை வென்று எங்கள் மனக்காயத்துக்கு தற்காலிக மருந்து போட்டுக்கொள்வோம். ஒருவேளை தோற்றுவிட்டால்.. "விடு மச்சான். நேத்து இந்தியாவே தோத்துடுச்சு"னு மொக்கையாய் ஆறுதலும் சொல்லிக் கொள்வதுண்டு.

"அவன் தான் ஆப்-சைடு'ல அடிக்கறான்னு தெரியுதுல்ல, லெக்-சைடு'ல போடுடா..." "டேய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கறாண்டா" போன்ற, சென்னை-28 என்ற திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமான அனைத்து அம்சங்களின் பிறப்பிடமே இந்த மெரீனா தான்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என, வயது வித்தியாசமில்லாமல் எத்தனை அணிகள், எத்தனை நண்பர்கள், எத்தனை அனுபவங்கள்... இதைப்பற்றி எழுதவே தனி பதிவு தேவைப்படும்... So.. coming back to the issue...

ஏற்கனவே ஞாயிறு மதியங்களில் மெரீனாவில் பார்க்கிங் காரணமாய் கிரிக்கெட் விளையாட முடியாது. நாங்கள் விளையாடுவதே ஞாயிறு காலை முதல் மதியம் வரையிலான ஐந்து மணிநேரங்கள் தான். இதிலும் பல ஞாயிறுகளில், விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரக் கூட்டங்கள், மாரத்தான் ஓட்டங்கள், என்று எங்கள் கிரிக்கெட் ஆட்டங்கள் தடைபட்டுப் போவதுண்டு.

மேலும், சென்னையில் பெரும்பாலான பள்ளி மைதானங்களில் பொதுமக்கள் விளையாட அனுமதிக்கப் படுவதில்லை. மாநகராட்சி மைதானங்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மழை வேறு ஆரம்பித்துவிட்டதால் இருக்கும் ஒன்றிரண்டு மைதானங்களும் சகதியாய் நிரம்பி ஈஈஈஈ'யென்று இளித்துக் கொண்டிருக்கும்.

எனவே, மெரீனாவில் இனி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற காவல்துறையின் இந்த அறிவிப்பு, அங்கு கிரிக்கெட் விளையாடிய, விளையாடுகிற, விளையாடப் போகிற எவருக்குமே அதிர்ச்சியாய்த் தான் இருக்கும்..

---

ஒரு நிமிஷம் இருங்க.. போன்..

"மணி.. சீனா பேசறேன்டா"
"சொல்லு சீனா"
"இந்த வாரத்திலிருந்து பீச்'ல விளையாடக் கூடாதாமேடா... அப்போ எங்க போய் விளையாடறது??"
"ஒன் செகண்ட் மச்சி.."

---

சரிங்க... இப்போ நாங்க லோக்கலில் இருக்குற மைதானங்களோட கண்டிஷன்ஸ் பத்தியெல்லாம் டிஸ்கஸ் பண்ணனும்... வரட்டுமா..?!?

Wednesday, November 4, 2009

10/10 — பிடித்ததும், பிடிக்காததும்

என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நண்பர் நர்சிம்மிற்கு நன்றிகள்.

***************************

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

*****
இதோ எனது பதில்கள்:

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ராகுல் காந்தி (தன் தந்தையைப் போன்றே வசீகரம்)
பிடிக்காதவர்: விஜய டி.ராஜேந்தர்

2. எழுத்தாளர்
பிடித்தவர்: சுஜாதா
பிடிக்காதவர்: நான் அதிகம் பேரை படித்ததில்லை என்பதால் அப்படி யாரும் இல்லீங்கோ.

3. கவிஞர்
பிடித்தவர்: வாலி
பிடிக்காதவர்: பேரரசு

4. இயக்குனர்
பிடித்தவர்: ஷங்கர்
பிடிக்காதவர்: (மீண்டும்) பேரரசு

5. நடிகர்
பிடித்தவர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பிடிக்காதவர்: சிபிராஜ்

6. நடிகை
பிடித்தவர்: அனுஷ்கா (அருந்ததி பார்த்ததிலிருந்து)
பிடிக்காதவர்: மகேஸ்வரி (யாருன்னு தெரியலையா? தப்பிச்சீங்க விடுங்க..)

7.இசையமைப்பாளர்
பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்: ஸ்ரீகாந்த் தேவா

8. தொழிலதிபர்
பிடித்தவர்: அம்பானி (சாமானியனிடமும் செல்போன் இருக்கக் காரணமானவர்)
பிடிக்காதவர்: விஜய் ஈஸ்வரன் (QuestNet மோசடி நிறுவனர்)

9. பதிவர்
பிடித்த பதிவர்: நர்சிம் (அவர் இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததால் மட்டுமல்ல)
பிடிக்காத பதிவர்: விரைவில்... (யாருமில்லன்றத எப்படி சொன்னேன் பார்த்தீங்களா)

10. விளையாட்டு
பிடித்தது: கிரிக்கெட்
பிடிக்காதது: Bullfighting (பாவம்.. அந்த மாட்ட உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசில கொன்னுருவானுங்க.. சிலநேரம் இவனுங்க உயிரும் போறதுண்டு..)

*******************************

தொடர அழைப்பது..

1. அவிய்ங்க ராசா
2. ஜாக்கி சேகர்