Sunday, July 26, 2009

சுனாமி - டிசம்பர் 26, 2004

நேற்று முன்தினம் மும்பையை சுனாமிப்(?) பேரலைகள் தாக்கியதை செய்தியில் கண்டேன்...
டிசம்பர் 26, 2004 அன்று காலை, சுனாமி சென்னையைத் தாக்கிய நேரத்தில் மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன்... எப்படியோ ஓடிப் பிழைத்தேன் அன்று என் நண்பர்களுடன்... அதன் கோரத்தை என்னால் முடிந்த அளவுக்கு விவரிக்க முயன்றிருக்கிறேன்....

(குறிப்பு:)கொஞ்சம் பெரிதாகத் தான் இருக்கும்... பொறுத்துக் கொள்ளவும்..

====================================

டற்கரையில் இனிமையாய் கால் பதித்த நேரங்கள் முடிந்து
கண்ணீர் மை தொட்டு கவிதை எழுதும் நேரமிது...

அந்த விடிகாலை வேளையில் சுமத்ரா கொண்ட சிறு நடுக்கம்
எத்தனையோ பேருக்கு விடியாமலேயே போய்விட்டது...

நீ எம்பிக்குதித்த சொற்ப நிமிடங்களில் எழில் கொஞ்சிய இடமெல்லாம்
எமன் வந்து போன இடமாய் உருமாறிக் கிடக்கிறது...

இனி உன் கரைதேடி ஓய்வெடுக்க வருவோரெல்லாம்
உயிரைக் கையில் பிடித்து ஓடவும் தயாராய்த் தான் வர வேண்டும்...

நீ குதறிவிட்டுப் போனதில் அழகிய பிஞ்சுகள் எல்லாம்
அழுகிய பிரேதங்களாய்... எழுதும் போதே இப்படி வலிக்கிறதே..
நீ ஏறி மிதித்தபோது எப்படி வலித்திருக்கும்??

இவை மட்டுமா???

உன்னைக் கவிதையாய் வர்ணித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறாய்...

கடவுளாய் வணங்கியவர்கள் வயிற்றில் கலவரத்தைக் கரைத்திருக்கிறாய்...

பெற்றவர்கள் கண்முன்னே பிள்ளைகளைத் தின்றிருக்கிறாய்...

உற்றவர்களையும் உடமைகளையும் அடாவடியாய் அடித்துச் சென்றிருக்கிறாய்...

உன் அலையோசையால் பலரின் உயிரோசை அடக்கி இருக்கிறாய்...

இதுவரை பொழுதுபோக்கு அம்சமாய் இருந்த நீ
இன்று பலரது உயிர்போக்கும் அபாயமாய் உருவெடுத்திருக்கிறாய்...

உன் அலைகரம் நீட்டி உலக வரைபடத்தில்
ஒருசில கிராமங்களை கிழித்துப் போட்டிருக்கிறாய்...

ஏட்டில் மட்டுமே படித்து வந்த அனுபவங்களை
எதிரில் வந்து நிகழ்த்திக் காட்டியிருக்கிறாய்...

அலையோரமாய் தங்கள் பெயர் எழுதி விளையாடியவர்களை எல்லாம்
இறந்தவர் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறாய்...

ஏனிந்த வெறியாட்டம்???

நீதான் நீளத்திலும் ஆழத்திலும் பெரியவள் என்பதை ஒப்புக்கொண்டு விட்டோமே?
பின் ஏன் உயரத்திலும் உன்னைப் பெரியவளாய்க் காட்ட எங்கள் உயிரோடு விளையாடுகிறாய்???

என்றாவது ஒருநாள் அஸ்தியாய் வந்து உன்னுள் தானே கரையப் போகிறோம்?
அதற்குள் நீயே அவசரப்பட்டு எங்கள் உயிர் பறித்ததின் அவசியம் என்ன???

எங்கள் உயிர்களை ஓடிப்பிடித்து விளையாடியதற்கும்,
இப்போது உடல்களை ஒளித்து வைத்து விளையாடுவதற்கும் காரணம் என்ன???

எங்களை மரண ஓலை வாசிக்க வைத்துவிட்டு
நீ மட்டும் மௌனம் பேசுவதின் மர்மம் என்ன???

உன் சுழல்நாக்கு வளைத்து விழுங்கியதில்
அனைத்தையும் பறிகொடுத்தவர்களுக்கு உன் பதில் என்ன?

இத்தனை கேள்விகளுக்கும் விடைகொடுக்க முடியுமா உன்னால்???

புலி பதுங்குவது பாய்வதற்குத் தான்..
அலை பதுங்குவது பல உயிர்களை மாய்ப்பதற்குத் தான்
என்பதை சொல்லாமல் சொல்கிறாயா???

எதுவாக இருந்தாலும் இப்போதே சொல்லிவிடு!
ஏனெனில்,
உன்னைக் கேள்வி கேட்க அடுத்தமுறை நான் இருப்பேனா? இல்லை
என் பிணத்தையே தேடிக் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை...

Saturday, July 25, 2009

நீ... நான்... மற்றும் மழை!

யார் சொல்லியும்Love & Rain
கேட்காமல் நனையத்துடிக்கும்
உன் செல்ல திமிரை
நினைவூட்டியது..
நேற்று பெய்த மழை...

********************************************

நனைந்து விட்ட
என் தலைமுடி துவட்டுகிறாய்...
உன் துப்பட்டாவின் தயவால்
மீண்டும் மேகம் சேர்கின்றன
மழைத் துளிகள்...

********************************************
புயலாய் என்னை மையம் கொண்டு
மழையாய் நனைக்கின்றன
உன் நினைவுகள்...
கரையேற விரும்பாத கட்டுமரமாய்
தத்தளிக்கிறேன் நான்...

Thursday, July 16, 2009

அறிமுகம்

இன்று முதல் என் எண்ணங்களை உங்கள் பார்வைக்கு கடை விரிக்கிறேன்... என்னை வலைப்பக்கத்துக்கு அறிமுகப்படுத்தி ஊக்கமூட்டிய நண்பர்களுக்கும், இனிமேல் அறிமுகமாகி ஊக்கப்படுத்தப் போகிற நண்பர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்...