Sunday, March 28, 2010

பதிவர்கள் சங்கம் / சங்கமம் - அடுத்தது என்ன?

நேற்று நடைபெற்ற, பதிவர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான சந்திப்பிற்கு நானும் சென்றிருந்தேன். ஏற்கனவே அறிமுகமான/அறிமுகமில்லாத பதிவர் நண்பர்களையும், சங்கம் துவக்குவதில் இருக்கும் சாதக/பாதகங்கள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் சந்திக்க நேர்ந்தது. நானும் என் சிற்றறிவுக்கு(?) எட்டிய சில சந்தேகங்களை எழுப்பினேன்.

பதிவர்கள் தனித்தனி குழுக்களாக செயல்படாமல் ஒருங்கிணைந்து ஒரே குழுமமாய், குடும்பமாய் இயங்கும் வசதியை அமைத்துத் தரவிருக்கும் இந்த பதிவர் சங்கம் அமைக்கும் ஆலோசனையை நான் முற்றிலும் வரவேற்கிறேன். கிட்டத்தட்ட அங்குவந்திருந்த அனைவரின் மனோநிலையும் அப்படித் தான் இருந்தது.

ஆனால், ஒரு குழுவாய் எப்படி இயங்கப் போகிறோம், ஒவ்வொருவரின் பங்களிப்பு என்ன, இதன்மூலம் பதிவர்களுக்கும், பதிவர்களால் மற்றவர்களுக்கும் ஏற்படப் போகும் நன்மை/தீமைகள் என்னவாக இருக்கும், பொதுவில் ப்ளாக் என்பது நம் சொந்த விருப்பு வெறுப்புகளையும், படைப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாயிற்றே; இதில் தனி நபர் சுதந்திரம் (இப்ப மட்டும் என்ன வாழுது) எத்துனை முக்கியத்துவம் பெறும் போன்ற அடிப்படை கேள்விகள் தான் எனக்குள் எழுந்தவை...

உண்மையைச் சொல்லப் போனால் இவைபற்றித் தான் நேற்று விவாத்திருக்க வேண்டும். ஏனெனில் வந்திருந்த அனைவருக்குமே ஒருகுழுவாய் நாம் சங்கமிக்கப் போகிறோம் என்கிற உணர்வுடன் மட்டுமே அங்கு கூடியிருந்தார்கள். திரு.ராதாகிருஷ்ணன் ஐயா, திரு.நர்சிம், திரு.டோண்டு, திரு.அர்விந்த்(பெங்களூர்), திரு.லக்கி ஆகியோரின் பேச்சுக்களும் அவ்வண்ணமே இருந்தது. ஆனால்.. சங்கம் வேண்டுமா, வேண்டாமா என்கிற ரீதியில் விவாதம் திசை திரும்பியது மாதிரி ஒரு உணர்வு.

காரணம், நான் முன்பு கூறியதுபோல் அடிப்படையான விஷயங்களை சரியாக தயார் செய்திராமல், நேரடியாக விவாதத்தை துவக்கியது தான். "அத்தியாவசிய நேரங்களில் பதிவர்கள் தங்களுக்குள் தங்களாலான உதவிகளை செய்யவும், பெற்றுக் கொள்ளவும் இந்த சங்கம் ஒரு காரணமாய் இருக்கட்டும்" என்ற நர்சிம்'மின் பேச்சு மட்டுமே ஆரோக்யமான சிந்தனையாய்ப் பட்டது. (அவரை முன்னால் பேச அனுமதித்திருக்கலாம்.. ஒருவேளை சந்திப்பு ஓரளவிற்காவது சரியான திசையில் சென்றிருக்கும்.)

அதைவிடுத்து, கூகிளைப் போய் கேட்கலாம், அரசாங்கத்தைப் போய் கேட்கலாம், அவங்களைப் போய் கேட்கலாம், இவங்களைப் போய் கேட்கலாம், ஊர் கூடினாத் தான் தேர் இழுக்க முடியும், ஒத்தை மரம் தோப்பாகாது என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது அசுவாரஸ்யமாய் இருந்தது.

நாம் அடுத்தகட்டம் நோக்கி செல்லும்போது அதற்கான முன்னேற்பாடுகளையும், அவ்விடத்தில் நமக்கான பணியென்ன, நமது பங்களிப்பு என்ன ஆகிய குறைந்தபட்ச விஷயங்களையாவது சிந்திக்க வேண்டும். அப்போது தான், நம் நகர்வும் ஆக்கப் பூர்வமாய் இருக்கும். அப்புறம் பார்த்துக்கலாம், அங்க போய் பண்ணிக்கலாம் என்பதெல்லாம் கதைக்கு ஆகாது.

நமது அடுத்த சந்திப்பில் இதுபற்றி மட்டுமே பேசுவோம். இது தான் என் கருத்து. மற்றபடி, சங்கம் வேண்டுமென்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த சங்கத்தில் இணைய விரும்புவோருக்கு வசதியாய் மின்னஞ்சல் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.. (tamilbloggersforum@gmail.com) நான் அனுப்பியாச்சு.. அது தொடர்பான நண்பர் "பலாபட்டறை" ஷங்கர் அவர்களின் பதிவு இங்கே!