Friday, October 9, 2009

மம்மிய ஷுட் பண்ணிடலாம்...

ரயில் பயணம் என்பது சுகமான ஒரு விஷயம். ஒவ்வொரு முறையும் பலதரப்பட்ட மக்களையும் ஒருசேர சந்திக்கும் வாய்ப்புண்டு. அதிலும் நாம் நண்பர்களுடன் குழுவாகப் போனால் கொண்டாட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இம்முறை நான் சொந்த அலுவல் காரணமாக தனியே பயணிக்கிறேன். இரு தினங்களுக்கு முன் நான் மேற்கொண்ட ஹைதராபாத் பயண அனுபவம் இதோ உங்கள் பார்வைக்கு...

********************

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....." என்று ஆரம்பித்து மூன்று மொழிகளில் ஏதோ ஒரு ரயில் கிளம்பவிருப்பதை அறிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்ணின் குரல்...
சென்ட்ரல் ஸ்டேஷனின் எட்டாவது பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த சென்னை-ஹைதராபாத் விரைவு ரயிலின் எனக்கான கம்பார்ட்மெண்டைத் தேடியபடி நடந்து கொண்டிருந்தேன்...

என் நேரம்... நீநீநீநீநீ....ளமான அந்த ரயிலின் கடைசியில் இருந்தது எனக்கான கோச்.. கொஞ்சம் விட்டால் என்ஜின் டிரைவர் பக்கத்துலயே சீட் கொடுத்திருப்பானுங்க போல.. அவ்வளவு தூரம்... அருகிருந்த கடையில் சில்லென்று ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு என் கோச்சை அடைந்தேன்..

முன்பதிவு செய்தபோதே தொல்லையில்லாமல் தூங்குவதற்கு வசதியாய் அப்பர் பெர்த் செய்திருந்தேன்.. அதனால் ஜன்னலோர சீட் கிடைக்க வில்லை.. அடடா.. தூங்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்திருக்கலாமே.. வடை போச்சே.. என்று நொந்து கொண்டே நான் கொண்டு சென்ற எனது பேக்-ஐ மேலே வைத்துவிட்டு எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்... ரயில் கிளம்ப இன்னும் சிறிது நேரம் மட்டும் இருப்பதை கடிகாரம் சொல்லியது...

சற்று நேரத்தில் இருக்கைகள் நிரம்பி என்னைச் சுற்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் ரீங்காரமிடத் துவங்கின... ரயிலும் மெதுவாய் நகரத் துவங்கியது.. என் டிக்கெட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த டிடிஆரிடம் ரயில் எத்தனை மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். சைடு-அப்பர் புண்ணியவான் ஒருத்தர் ரயில் வேகமெடுக்கத் துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் தெலுகு செய்தித்தாள் ஒன்றுடன் மேலேறிப் படுத்து விட நான் சென்று ஜன்னலோரம் அமர்ந்தேன்... பின்னோக்கியபடி நடக்கும் மரங்களும் மற்றவைகளும் காலமும் சற்று பின்னால் சென்று நாம் மகிழ்வாய் இருந்த கணங்களுக்குள் நம்மைத் தள்ளிவிடாதா என்று ஏங்க வைத்தன...

பெருமூச்சுடன் எதிரில் கவனித்தேன்.. தன் தாயின் மடியில் அமர்ந்து ஜன்னல் வழி வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் அந்த குட்டிப் பையன்.. மூன்று அல்லது மூன்றரை வயதிருக்கலாம் அவனுக்கு... என்னைப் பார்த்தும் சிரித்தான்.. என்னிடம் அழைத்தேன்.. உடனே ஒட்டிக் கொண்டு விட்டான்... கவின்.. அது தான் அவன் பெயராம்.. உன் பெயரில் பால் எல்லாம் இருக்குடா என்றேன்.. "..தெரியுமே.. அத குடிச்சா வேகமா வளருவாங்களே.." என்றான்... விளம்பரங்கள் குழந்தைகளை மிகவிரைவாய் சென்றடைகின்றது என்பது எனக்கு விளங்கியது...

ஒரு இடத்தில நிற்காமல் கம்பார்ட்மெண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்... ரயிலுக்குள் விற்கும் ஒவ்வொரு பொருளையும் வாங்கித் தரும்படி தன் அம்மாவிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.. அவன் அம்மாவோ நீ அடம் பிடித்தால் அந்த அங்கிள் உன்னை தூக்கிட்டு போயிடுவார் என்று என்னைக் காட்டி சொன்னார்.. உடனே நானும் "சந்தோஷமாக" என்று சொல்லி சிரித்தேன்...

இவனை திசை திருப்புவதற்காக கையோடு கொண்டுவந்திருந்த "பிக்சர்ஸ் புக்"-ஐ கொடுத்தார்... அதிலிருப்பவைகளின் பெயரை எல்லாம் என்னிடம் தவறாகச் சொல்லிக் காட்டி சிரித்தான்.. பெயர் தெரியாத படங்களை "குவா-குவா-ஷாஷா" என்று சொல்லி சிரித்தான்.. அதன் அர்த்தம் புரியவில்லை.. ஆனால் அவன் சொன்ன விதம் பிடித்திருந்தது.. "குவா-குவா-ஷாஷா"... இந்த வார்த்தையை அவன் பலமுறை பயன்படுத்தினான்... மிகவும் அழகாக....

சிறிது நேரத்தில் எங்கள் அருகே பிளாஸ்டிக் பொம்மைகளை விற்றுக் கொண்டு வந்தார் ஒருவர்.. பத்து சீட் தள்ளியிருந்த ஒரு பெண்மணி எழுந்து வந்து இவன் எதிரில் தன் பிள்ளைக்கு ஒரு பிளாஸ்டிக் துப்பாக்கி பொம்மை வாங்கிக் கொடுத்தார்... அவ்வளவு தான்... தனக்கும் ஒரு துப்பாக்கி வேண்டுமென்று இவன் தனது அம்மாவிடம் மீண்டும் அடம் பிடிக்க ஆரம்பித்தான்.. எவ்வளவு கொஞ்சியும் கெஞ்சியும் அவன் அம்மா மசியவில்லை... சற்று நேரம் பொறுத்துப் பார்த்த பொம்மை வியாபாரியும் அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று விட்டார்... துப்பாக்கி பொம்மை வாங்கிய அந்த குழந்தைக்கும் இவன் வயது தான் இருக்கும்.. அது வேண்டுமென்றே நிமிடத்திற்கொருமுறை இவனிடம் ஓடிவந்து சுடுவது போல் காட்டி விட்டு போய்க்கொண்டிருந்தது... இவன் கிட்டத்தட்ட அழுதே விட்டான்... மீண்டும் அந்த பொம்மைக்காரர் வந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லி நான் சமாதானப் படுத்தியபின் தான் அமைதியானான்... ஆனால் ஐந்து நிமிடத்திற்கொருமுறை என் இன்னும் அந்த பொம்மைக்காரர் வரவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தான்..

அப்படி இப்படியென்று ரயில் நெல்லூரை நெருங்கியிருந்தது. ஒரு காபி வாங்கிக் குடித்துவிட்டு டின்னர் என்ன வேண்டும் என்று கேட்ட IRCTC நபரிடம் வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தேன். எட்டு மணிவாக்கில் வெஜிடபிள் பிரியாணியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் நாற்பது ரூபாயை வாங்கிக் கொண்டு போனார் அந்த நபர்.

கவினுக்குப் பசி எடுத்திருக்கும் போல.. அவன் அம்மா கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு இட்லியும் சட்னியும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். அப்போதும் அவன் எனக்கு துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தான். நான் அவனிடம், "நீ ஒழுங்காக சாப்பிட்டால் அங்கிள் உனக்கு வாங்கித் தருவேன்" என்று சொல்லி சாப்பிட வைத்தேன். ஒருவழியாக இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டான். நானும் எனது வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட்டு முடித்தேன்.

சிறிது நேரம் கழித்து கவினுக்கு குட்நைட் சொல்லிவிட்டு என் பெர்த்தின் மேலேறிப் படுத்தேன். அப்போதும் கவின் அந்த துப்பாக்கி வைத்திருக்கும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கிப் போய்விட்டேன். சரியாகக் காலையில் ஐந்து மணிக்கு விழிப்பு வந்தபோது ரயில் செகந்திராபாத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கவின் தூங்கிக் கொண்டிருந்தான். கவினின் அம்மா அவன் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். நான் இறங்கிச் சென்று முகம் கழுவி விட்டுவந்தேன். ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. கவினை அவன் அம்மா எழுப்பினார். எழுந்ததும் என்னைப் பார்த்து சிரித்தவன், துப்பாக்கி பொம்மை வாங்கிட்டீங்களா?? என்று கேட்டான். நானும் ரயிலில் இருந்து இறங்கியதும் வாங்கித்தருகிறேன் என்று சொன்னேன். அப்போதும் கவினின் அம்மா அவனை அதையெல்லாம் வாங்கக் கூடாது என்று அதட்டினார். உடனே என் காதருகில் வந்தவன், "நீங்க வாங்கித் தாங்க அங்கிள்... இந்த மம்மிய ஷுட் பண்ணிடலாம்.." என்று கூறி சிரித்தான்.

ரயில் நின்றது. கவினின் அப்பா அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவரைப் பார்த்தும் தாவிச் சென்றவன், "அங்கிள்.. மறக்காம எனக்கு துப்பாக்கி பொம்மை வாங்கிட்டு வாங்க" என்று சொல்லி கையசைத்து விடை பெற்றான். நானும் "கண்டிப்பாக வாங்கித் தருகிறேன்" என்று புன்னகையுடன் விடைபெற்றேன்..

அடுத்தமுறை கவினைப் பார்க்கும் போது அவனுக்குக் கண்டிப்பாக ஒரு துப்பாக்கி பொம்மை வாங்கித் தர வேண்டும்!!!

17 comments:

 1. வாவ், கச்சிதமான, தேர்ந்த எழுத்துகள். ஒரு சிறுகதை மாதிரியே இருக்கு. ரயில் பயணங்களைப் பற்றி எவ்வளவு படித்தாலும் அலுப்பதில்லை.

  அனுஜன்யா

  ReplyDelete
 2. நன்றி அனுஜன்யா...
  // ரயில் பயணங்களைப் பற்றி எவ்வளவு படித்தாலும் அலுப்பதில்லை//
  உண்மை தான்... :)

  ReplyDelete
 3. உங்க பதிவு போஸ்ட் எல்லாம் படிச்சேன். வெரி நைஸ்.

  ReplyDelete
 4. ரொம்ப நன்றிங்க மணிகண்டன்...

  ReplyDelete
 5. ஆமாம் எனக்கும் ரயிலில் நீண்ட தூரம் போவதென்றால் ரொம்ப பிடிக்கும்...

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா...!

  ReplyDelete
 7. Romba azhagana sambavam and super ah yeludhirukeenga. :) A nice start. Keep it going. Will keep coming to see more from you. :)

  ReplyDelete
 8. அழகான பயணம்.. அதனை மிகவும் அழகாக விரிவு படுத்திய உங்கள் தமிழ்! வாழ்த்துக்கள்! அதிலும் ஹைதராபாத் ரயிலில் கடைசி பெட்டி தேடி செல்லும் அனுபவம் அவ்வபோது பெறுபவர்களில் நானும் ஒருத்தி! மிகவும் ரசித்து படித்தேன்! எனது வலை பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி! உங்கள் பக்கத்திற்கும் இனிமேல் வருகை தருவேன்! :)

  ReplyDelete
 9. @ நித்யா - முதல் வருகைக்கு நன்றி நித்யா...! அவசியம் அடிக்கடி வருகை தாருங்கள்..

  @ ரோஹிணி - முதல் வருகைக்கு நன்றி ரோஹிணி.. அவசியம் அடிக்கடி வருகை தாருங்கள்..//அதிலும் ஹைதராபாத் ரயிலில் கடைசி பெட்டி தேடி செல்லும் அனுபவம் அவ்வபோது பெறுபவர்களில் நானும் ஒருத்தி!//
  :)

  ReplyDelete
 10. நல்ல மொழி ஊட்டம் இடுகையை கதை என்ற நிலைக்கு நகர்த்துகிறது
  உங்கள் உரைநடை கவிதையை விட சிறப்பாக இருப்பது போல தோன்றுகிறது

  ReplyDelete
 11. "நீங்க வாங்கித் தாங்க அங்கிள்... இந்த மம்மிய ஷுட் பண்ணிடலாம்..".படிச்சு சிரிப்பு வந்திட்டது மணிகண்டன்.குழந்தைகள் தெய்வீகம்!!

  ReplyDelete
 12. ரயில் பயணம் என்பதை விட கவின் உடன் பயணம் என்று சொல்லலாம். அடுத்த முறை அவனை சந்திக்கும் போது மறக்காமல் துப்பாக்கி பொம்மையை வாங்கி குடுங்க பாஸ் .

  பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. கலக்கிட்டீங்க மணிகண்டன். :))

  ReplyDelete
 14. நல்ல பகிர்வு மணி; சுட்டி தந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete