Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, February 17, 2010

பதிவர்கள் புத்தகங்கள்...சின்னதாய் ஒரு அலசல்

பதிவுலக நண்பர்கள், திரு.நர்சிம், திரு.பரிசல்காரன், திரு.கேபிள் சங்கர் ஆகிய மூவரும் தங்கள் முதல் படைப்பை சிறுகதைத் தொகுப்புகளாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.. அது எங்களுக்குத் தெரியும்.. நீ என்ன சொல்லவந்த.. அதை சொல்லு முதல்ல.. அப்படின்னு சொல்றீங்களா??? ரைட்டு..

இவர்களின் இந்தக் கதைகள் எல்லாம் ஏற்கெனவே, இவர்களின் பதிவுகளில் படித்தது தான் என்றாலும், புத்தகமாய் அதைக் காணும் பொழுது ஒரு இனம்புரியா சுவாரஸ்யம்.. மூன்று புத்தகங்களையும் ஒரே மூச்சில் தான்(வெவ்வேறு நாட்களில்) படித்தேன் என்றாலும் நான் படித்த வரிசையிலேயே பகிர்ந்து கொள்கிறேன்..

==========================================

அய்யனார் கம்மா: (ஆசிரியர்: நர்சிம்)

நான் காசு கொடுத்து வாங்கிய முதல் சிறுகதை புத்தகம்.. மொத்தம் பதிமூன்று கதைகள்.. இதில் முதல் கதையே அய்யனார் கம்மா தான்.. அழகான கிராமத்துக்கு நம்மை கூட்டிப் போய், மாட்டுக்கு லாடம் அடிப்பதைக் காட்டித் தந்து, வெள்ளந்திப் பேச்சுகளின் சுவாரஸ்ய நடையினூடே நம்மையும் அறியாமல், சற்று நேரத்தில் கதையின் நாயகன் செய்யப் போகும் கொலைக்கு நம்மையும் சாட்சியாக்கி விடுகிறார். இந்தக் கதையில் என்னை மிகக் கவர்ந்த வரிகள்.. ஒரு மாட்டின் உரிமையாளர், லாடம் அடிப்பவனிடம் சொல்லும் "எம்புட்டு பாரம்ண்டாலும் இழுத்துப் புடும்யா எந்தெய்வம்".. தான்.. அந்த வரியில் தான் எத்துனை நன்றி கலந்த நம்பிக்கை..
அடுத்த கதை.. தந்தையுமானவன்.. என்னை பொறுத்தவரை நர்சிம்மின் மாஸ்டர் பீஸ்.. பிறந்த அன்றே குழந்தையை எமனிடம் வாரிக் கொடுப்பதென்பது எத்தனைப் பேருக்கு நடந்திருக்கும்? இருந்தாலும் அந்த தந்தையின் மனவேதனையை படிப்பவர்களும் புரிந்து கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ இயலுமா??... முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தன் எழுத்தால்.. இந்தக் கதையின் வீச்சு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.. படிக்காதவர்கள் தேடித் பிடித்து படிக்கவும்..

தொடர்ந்து வரும் கதைகளில் வெகு லாவகமாய் தேர்ந்த வரிகளின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் நம்முள் விதைத்துச் செல்கிறார் நர்சிம்.. (உ.ம்:: செம்பட்டைக் கிழவி, ம'ரணம்', சந்தர்ப்ப வதம்).. நகைச்சுவைக்கு "தலைவர்கள்", மற்றும் "வெத்தலைப் பெட்டி" ஆகியவையும் உண்டு..


============================================

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்
(ஆசிரியர்: பரிசல்காரன்)


கவித்துவமான புத்தகத் தலைப்பு.. 17 கதைகள், 71 பக்கங்கள்... முதல் கதையான "தனிமை-கொலை-தற்கொலை"யில் கதையின் நாயகனின் நட்பும் காதலும் நிறைந்த குழப்பமான மனநிலையை பரபரப்பான சொற் பிரயோகங்கள் மூலம் படிக்கும் நம்மிடம் தந்துவிடுவது மிகச் சிறப்பு.. கிட்டத்தட்ட எல்லா கதைகளையும், கதையின் நாயகனே நம்மிடம் விவரிப்பது போல் இருப்பதால், ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மால் காட்சிகளையும் கதையின் முக்கிய பாத்திரங்களையும் அருகிலிருந்து கவனிக்க முடிகிறது.. பரிசல் தனது வழக்கமான நேர்த்தியான மற்றும் தெளிந்த எழுத்து நடையில் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார், ஒரு பிரச்சனையும் இல்லாமல்..

பட்டர்பிளை எப்ஃபெக்டும், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதையும் சிம்ப்ளி சூப்பர்ப்.. இவரின் எல்லாக் கதைகளிலும் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் நாம் அனைவரும் சந்தித்திருக்கக் கூடிய அல்லது அதிகம் கேள்விபட்டிருக்கக் கூடிய ஒரு நபரை நம் கண்முன் நிறுத்துவதால், நம்மால் இன்னும் ஆழ்ந்து வாசிக்க முடிகிறது.. (உ.ம்:: மாற்றம், நட்பில் ஏனிந்த பொய்கள், ஸ்டார் நம்பர் ஒன்..)

மேலும், நான் அவன் இல்லை, கைதி, மனசுக்குள் மரணம் போன்ற சஸ்பென்ஸ் நிறைந்த கதைகளும், உணர்வுகளின் வலியை வருடிக் கொடுக்கும் மயிலிறகுகளாய் இருளின் நிறம், நட்சத்திரம் ஆகிய கதைகளும் உண்டு..


===============================================

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. (ஆசிரியர்: கேபிள் சங்கர்)


"முத்தம்" என்ற சுறுசுறு கதையில் ஆரம்பித்து மொத்தம் பதிமூன்று கதைகள்.. சொன்னது போலவே, விறுவிறுப்பான நடையில் புதிய தளங்களில் அமைந்துள்ளது எல்லா கதைகளும்.. கேபிள் சங்கர் அவர்கள், திரை-இயக்குனர் என்பதால் காட்சிப் படுத்தல்கள் வெகு இயல்பாய் அமைவது கதைகளுக்கு கூடுதல் பலம்..

இரண்டாவது கதையான "லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்" வாழ்கை வாழ்வதற்கே என்பதை அழுத்தமாய் பதிவு செய்கிறது.. முக்கால்வாசிக் கதைகளில், வர்ணனைகள் காமத்தின் உச்சம் தொட்டு திரும்புகின்றது.. ஆனால் அவை அந்தந்த கதைக்குத் தேவையானவைகள் தான் என்பது வாசிப்பு நிறைவுறும் போது கவனத்துக்கு வருகிறது..

மிகச்சிறந்த கதைகளென்று குறிப்பிட வேண்டுமானால், காதலின் வீரியம் சொல்லும் "மாம்பழ வாசனை" மற்றும் உறவுகளின் உள்ளம் சொல்லும் "நண்டு" ஆகியவற்றைச் சொல்லலாம்.. "ஆண்டாள்", "துரை-நான்-ரமேஷ் சார்" இரண்டும் கூட மேற்சொன்ன வகையறாவே..

"போஸ்டர்", "காமம் கொல்", "ராமி-சம்பத்-துப்பாக்கி" ஆகிய சுவாரஸ்ய திருப்பங்கள் நிறைந்த கதைகளும் உண்டு..


======
சரி.. இவ்வளவு சொன்னியே, ஒரு குறையும் இல்லையா அப்படின்னு கேட்டீங்கன்னா, நிச்சயம் சிறுசிறு குறைகள் இருக்கு... பதிவில் படித்தபோது இருந்த டெம்போவுக்கும், புத்தகமாய் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்துக்கும் சற்றேறக்குறைய வித்தியாசம் தெரிகிறது.. ஒரு சில கதைகள் சட்டென முடிந்துவிடுவது போன்ற பிரமையும் ஏற்படுகிறது..

ஆனால்.. ஒட்டுமொத்தமாய் பார்க்கும்போது.. இவைகள் அனைத்தும் எளிதில் களையக் கூடியவை தான் என்பதும், இவர்களின் எதிர்வரும் படைப்புகளில் இவை நிச்சயம் காணப்படாது என்பதுமே நான் புரிந்து கொண்டது..

எனவே, முடிந்தவர்கள் இந்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.. வாழ்த்துங்கள்..!!!

Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் – எனது பார்வையில்

vettaikaran
நேற்று இரவு முதலே பல பதிவுகளில் (நெகடிவ்வாக) விமர்சனங்கள் வரத்தொடங்கினாலும், விஜய், அனுஷ்கா, சன் டிவி, ஏவிஎம், நண்பர் நடிகர் சத்யன், துள்ள வைக்கும் பாடல்களால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் இன்னபிற காரணங்களால் டிக்கெட் முன்பதிவு செய்து இன்று அம்பத்தூர் ராக்கியில் பகல் காட்சி போயிருந்தேன்.. உண்மையிலேயே விஜய் செம மாஸ்'ப்பா..

அதே வழக்கமான, ஏதோ ஒரு லட்சியத்துடன் வரும் ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால் வில்லனை எதிர்த்து போராடி, நடுநடுவே, ஹீரோயினுடன் காதல், காமெடி என்று கலந்து கட்டி, இறுதியில் வெற்றிபெறும் தமிழ் சினிமாவுக்கே உரித்தான அரதப் பழசான கதை. ஆனால்.. லாஜிக் சற்றுமில்லாத திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் பிசிறடிக்கிறது படம்.. முதல்பாதி ஓரளவுக்கு கலகலப்பாய் நகர்ந்தாலும் ஏற்கெனவே பல திரைப்படங்களில் பார்த்துவிட்டதைப் போன்றதையொத்த காட்சிகள் என்பதால் சலிப்பே மிஞ்சுகிறது..

விஜய்யை பொறுத்தவரை, தன் பங்களிப்பை சரியாய் செய்திருக்கிறார்.. காமெடி மற்றும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்'களில் கவனம் செலுத்தும் இவர், கதையைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.. நீர் வீழ்ச்சியிலிருந்து குதிப்பது, காரோடு பறப்பது, அடிக்கும் போது எதிரிகள் பலமைல் தள்ளிப் போய் விழுவது போன்ற காட்சிகளுக்கெல்லாம் ஏன் சார் ஒத்துக்கறீங்க?? (படத்தின் ஆரம்பத்தில் கும்மாளமாய் ஆட்டம் போட்ட விஜய்யின் தீவிர ரசிகர்களே கூட இதுபோன்ற காட்சிகளால் நொந்துபோய் கமெண்ட்ஸ் அடித்ததைக் காண முடிந்தது..)

அனுஷ்கா சில/பல காட்சிகளில் விஜய்யை விட பெரியவராக/உயரமாகத் தெரிகிறார். அருந்ததி அளவுக்கு இத்திரைப்படத்தில் நம்மை ஈர்க்கவில்லை என்பதே உண்மை..

சத்யன், ஸ்ரீநாத், ஷாயாஜி போன்றோர் சிரிக்கவைக்க முயல்கின்றனர்.. ரொம்ப படங்களுக்குப் பின் நண்பர் சத்யனுக்கு நிறைய காட்சிகளில் வரும் வாய்ப்பு..

சாய்குமார், சலீம் கௌஸ், இன்னொரு தெலுங்கு பட வில்லன்.. இவர்களின் பாத்திரப் படைப்பு கர்மம்'டா சாமி.. அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியாய் வருபவர் மட்டும் (அவரும் தெலுங்காம்) கொஞ்சம் ஓகே.. சுகுமாரி, டெல்லி கணேஷ், கொச்சின் ஹனீபா ஆகியோரும் இருக்கிறார்கள்..

மற்றபடி, எடிட்டிங், இசை, நடனம், கலையலங்காரம், ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்களும் அந்தளவுக்கு கதைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது வருத்தப்பட வைக்கும் அடுத்த விஷயம்..

மொத்தத்தில் ஒரு திரைப்படத்தை ஹிட்'ஆக மாற்றக்கூடிய சில அம்சங்கள் இதில் மிஸ்ஸிங் என்றாலும் சன் டிவி என்ற பிரம்மாண்டம் துணையிருக்கிறது.. பார்ப்போம்..

எனக்கும் விஜய் பிடிக்கும் என்பதால் கொஞ்சம் வருத்தத்துடன்... Better Luck Next Time Vijay...

Wednesday, November 11, 2009

This Is It: ஒரு அற்புத அனுபவம்!



நான் ஒன்றும் மைக்கேல் ஜாக்சனின் ரசிகன் கிடையாது. அவரைத் திரையில் பார்த்ததும் மைக்க்க்க்கே......ல்ல்ல்ல் என்று அலறுபவனில்லை நான். அவரது பாடல்களின் (புரியப் போவதுமில்லை என்பது வேறு விஷயம்) அடிமை கிடையாது. ஆனால் அவரின் மறைவுக்குப் பின் வந்த, வந்துகொண்டிருக்கிற செய்திகளை அவ்வபோது கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு, சமீபத்தில் வெளியான This Is It திரைப்படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இன்று தான் அமைந்தது.

மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் தனது அடுத்த இசைச் சுற்றுப்பயணமான This Is It -க்கு அவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்வதையும், அதில் பங்குபெறும் மற்ற கலைஞர்களின் பேட்டிகளையும் மட்டுமே தொகுத்து வெளியாயிருக்கும் டாகுமெண்டரி படம் தான் This Is It.

சும்மா சொல்லக் கூடாது. அந்த மனிதரின் பெயரும் முகமும் திரையில் தெரியும்போது நம்மவர்களே போட்ட ஆனந்தக் கூச்சல் இருக்கிறதே.. எனக்கும் கொஞ்சம் சிலிர்த்துப் போய் விட்டது. ஐம்பது வயதென்று நம்ப முடியாத தோற்றமும் அவரின் நடன அசைவுகளும்... வாவ்... முக்கால் செகண்டுக்குள் அவரின் அங்கங்கள் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அனாயாசமாய் அசையும் அழகு இருக்கிறதே.. இப்போதுதான் தெரிகிறது... அவர் ஏன் உலகளாவிய ரசிகர்களை இந்தளவு கவர்ந்திருக்கிறார் என்று...

ஆனால் அவர் இறந்ததும், அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார், எலும்பும் தோலுமாய் இருந்தார், நடக்க முடியாமல் அவதிப்பட்டார் என்று எத்தனை செய்திகள். அத்தனையும் பொய்யென்று நிரூபிக்கிறது அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடன அசைவுகள். சக கலைஞர்களெல்லாம் 20-25 வயதுக்குட்பட்டவர்கள். ஆனால் அவர்கள் தான் அவருடன் ஈடுகொடுத்து ஆட முயன்று கொண்டிருந்தார்கள் என்றே கருதுகிறேன் நான்.

சத்தியமாய் அவரின் எந்த ஆல்பத்தையும் நான் இதற்குமுன் பார்த்திருக்காவிடினும், இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக அத்தனையும் ஒருசேரப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது. அவரின் ""Love Lives Forever"" என்ற வாசகத்துடன் நிறைவு பெறுகிறது படம்.

மைக்கேல் ஜாக்சனின் இந்த இசைக் காவியத்தைப் பார்க்க அடிப்படைத் தேவைகளாக நான் உணர்ந்தது இதைத்தான்...

அவரின் ரசிகனாக இருத்தல்??
குறைந்த பட்சம் அவரின் பாடல்களைப் பற்றிய முன்னறிவு??
மேற்கத்திய இசையின் மீது நாட்டம்???

ஒரு மண்ணும் இல்லை...!!!

இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் போதும்... மற்றதை மைக்கேல் ஜாக்சன் பார்த்துக் கொள்வார்.